குடியேறிகள் விவகாரத்தில் பெரும் பதற்றம் நிலவிவரும் நிலையில், பெலாரஸ் மீது தடைகள் விதிக்கப்பட்டால், ஐரோப்பிய ஒன்றியத்துக்குச் செல்லும் எரிவாயு குழாய்களை தடுப்போம் என அந்நாட்டின் ஜனாதிபதி லுகஷென்கொ எச்சரித்துள்ளார்.
ஈராக், சிரியா, ஏமன் போன்ற நாடுகளைச் சேர்ந்த ஆயிரக் கணக்கான குடியேறிகள், பெலாரஸ் போலாந்து நாட்டு எல்லைகளில் குவிந்துள்ளனர்.
போலந்துக்குள் சட்டவிரோதமாக நுழைய அகதிகளை பெலாரஸ் ஜனாதிபதி அலெக்ஸாண்டர் லுகஷென்கோ தூண்டி வருவதாக ஐரோப்பிய ஒன்றியம், நேட்டோ அமைப்புகள் குற்றம் சாட்டி வருகின்றன. எனினும், இந்தக் குற்றச்சாட்டை பெலாரஸ் மறுத்துள்ளது.
இதனிடையே, பெலாரசுக்கு பதிலடி கொடுக்கும் விதத்தில், அதன் மீது புதிய தடைகளை விதிக்க திட்டமிடுவதாகச் செய்திகள் வெளியாகின.
இந்தநிலையில், இவ்வாறு தடைகள் விதிக்கப்பட்டால், எரிவாயு விநியோகத்தை நிறுத்திவிடுவோம் என பெலாரஸ் ஜனாதிபதி லுகஷென்கொ கூறியுள்ளார்.
ரஷ்யாவிலிருந்து பெரிய எரிவாயு குழாய் மூலம் பெலாரஸ் நாட்டின் வழியாக போலந்து உட்பட பல நாடுகளுக்கு எரிவாயு விநியோகிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
முன்னதாக பெலாரஸ் அகதிகள் தங்கள் நாட்டுக்குள் சட்டவிரோதமாக நுழைவதற்கு ரஷ்யாதான் மூலகாரணம் என போலந்து பிரதமர் மாடேயுஷ் மொராவிஸ்கி குற்றம் சாட்டியிருந்தார்.