அமெரிக்க ஊடகவியலாளர் டேனி ஃபென்ஸ்டருக்கு, மியன்மார் இராணுவ நீதிமன்றம் 11 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.
ஃபென்ஸ்டர், குடியேற்றச் சட்டத்தை மீறியதற்காகவும், சட்ட விரோதமான தொடர்பு மற்றும் இராணுவத்திற்கு எதிரான எதிர்ப்பை ஊக்குவித்ததற்காகவும் குற்றவாளியாகக் கண்டறியப்பட்டார்.
இந்த வார தொடக்கத்தில் அவர் மீது தேசத்துரோகம் மற்றும் பயங்கரவாதம் ஆகிய இரண்டு கூடுதல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
அவரது புதிய குற்றச்சாட்டுகள் மீதான விசாரணை எதிர்வரும் நவம்பர் 16ஆம் திகதி தொடங்கவுள்ளது. குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம்.
ஃபிராண்டியர் மியன்மார் ஆன்லைன் தளத்தின் நிர்வாக ஆசிரியராக இருந்த 37வயதான ஃபென்ஸ்டர், மே மாதம் யாங்கூன் சர்வதேச விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டார்.
பெப்ரவரியில் இராணுவ சதிப்புரட்சிக்குப் பின்னர் தடுத்து வைக்கப்பட்டுள்ள டஸன் கணக்கான உள்ளூர் ஊடகவியலாளர்களில் இவரும் ஒருவர்.
ஃபிரான்டியரின் கூற்றுப்படி, ஃபென்ஸ்டர் இதற்கு முன்னர் மியன்மார் நவ் என்ற ஒரு சுயாதீன செய்தித் தளத்தில் பணியாற்றினார். இது ஆட்சிக்கவிழ்ப்புக்குப் பின்னர் இராணுவத்தை விமர்சித்துள்ளது.
மியன்மார் நவ் என்ற தடைசெய்யப்பட்ட ஊடகத்தில் அவர் பணியாற்றுகிறார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் குற்றச்சாட்டுகள் அனைத்தும் அமைந்தன. டேனி 2020ஆம் ஆண்டு ஜூலையில் மியன்மார் நவ்வில் இருந்து இராஜினாமா செய்து அடுத்த மாதமே ஃபிரான்டியரில் சேர்ந்தார்.
ஜப்பானிய பகுதிநேர ஊடகவியலாளர் ஒருவர் மியன்மாரில் கைது செய்யப்பட்டு போலிச் செய்திகளைப் பரப்பியதாகக் குற்றம் சாட்டப்பட்டு சில மாதங்களுக்குப் பிறகு வெள்ளிக்கிழமை அவருக்குத் தண்டனை வழங்கப்பட்டது.
யூகி கிடாசுமி என்ற குறித்த ஊடகவியலாளர், ஜப்பானின் பல முக்கிய செய்தி நிறுவனங்களுக்கு அறிக்கை அளித்து வந்தவர்.
மியன்மாரில் உள்ள சில வெளிநாட்டு நிருபர்களில் ஒருவர். அவர் சட்டத்தை மீறியதாக மியன்மார் அதிகாரிகள் கூறுகின்றனர், ஆனால், அவரை ஜப்பான் விடுதலை செய்ய கோரியதால் பின்னர் விடுவிக்கப்பட்டார்.