பெருந்தோட்டங்களில் உள்ள லயன் குடியிருப்புக்களை இல்லாது செய்வதற்காக 500 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நாடாளுமன்றில் இன்று (வெள்ளிக்கிழமை) 76 ஆவது வரவு செலவு திட்டத்தை முன்வைத்து, உரையாற்றும்போதே நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ இதனை தெரிவித்துள்ளார்.
அதற்கமைய லயன் குடியிருப்புக்களை 3 வருடங்களில் இல்லாது செய்யும் நோக்குடன், லயன் வீடுகளை அபிவிருத்தி செய்வதற்காக தோட்ட வீடமைப்பு அபிவிருத்திக்கு 2022ம் ஆண்டுக்காக 500 மில்லியன் ரூபாய் மேலதிகமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அதேபோல் புதிய தொழிநுட்பத்துடன் கூடிய பெருந்தோட்டங்களை உருவாக்குவது தமது நோக்கமாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசுக்கு சுமையை ஏற்றாமல் ஏராளமானவர்கள் இத்துறைகளில் செயற்பட்டு வருகின்றனர் என்றும் எனவே, குறிப்பிட்ட அமைச்சுகளும் திணைக்களங்களும் அவர்களுக்கான வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்பார்கள் என நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.