சூடானின் இராணுவத் தளபதி அப்தெல் ஃபத்தா அல்-புர்ஹான், இராணுவ சதிப்புரட்சிக்கு தலைமை தாங்கிய சில வாரங்களுக்குப் பிறகு, புதிய ஆளும் குழுவை நியமித்ததற்கு பல மேற்கத்திய நாடுகள் கடுமையான அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளன.
அல்-புர்ஹான், 14 உறுப்பினர்களைக் கொண்ட இறையாண்மைக் குழுவை உருவாக்குவதற்கான ஆணையை நேற்று முன் தினம் (வியாழக்கிழமை) வெளியிட்டார். தன்னைத் தலைவராகக் கொண்டு, வியாழன் பிற்பகுதியில் பதவியேற்றார்.
அஞ்சப்படும் துணை இராணுவ விரைவு ஆதரவுப் படைகளின் தளபதி, ஹெமெட்டி என்றும் அழைக்கப்படும் மொஹமட் ஹம்டன் டகாலோ, சபையின் துணைத் தலைவராக பதவியேற்றார்.
புதிய ஆளும் குழுவில் முந்தைய சபையில் அங்கம் வகித்த மூன்று மூத்த இராணுவப் பிரமுகர்கள், ஐந்து பொதுமக்கள் மற்றும் மூன்று முன்னாள் கிளர்ச்சியாளர்கள் உள்ளனர். அவர்கள் பல தசாப்தங்களாக உள்ள உள்நாட்டு மோதல்களை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் முன்னாள் இடைக்கால அரசாங்கத்துடன் ஜூபா சமாதான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். பிந்தைய மூவரும் இன்னும் பதவியேற்கவில்லை.
‘இராணுவத்தின் இந்த ஒருதலைப்பட்சமான நடவடிக்கைகள், ஒப்புக் கொள்ளப்பட்ட இடைநிலை கட்டமைப்பை நிலைநிறுத்துவதற்கான அதன் உறுதிப்பாட்டைக் குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது’ என்று நோர்வே, ஐக்கிய இராச்சியம்,
அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சுவிஸ்லாந்து ஆகிய நாடுகள் அறிக்கை வெளியிட்டுள்ளன.
2019இல் நீண்டகால ஆட்சியாளர் உமர் அல்-பஷீரை அகற்ற வழிவகுத்த போராட்டங்களை முன்னெடுத்த குடைக் கூட்டணியான சுதந்திரம் மற்றும் மாற்றத்திற்கான படைகளின் பிரதிநிதிகள் சபையில் இருந்து நீக்கப்பட்டனர்.