கேம்பிரிட்ජ්ஷையர் (Cambridgeshire) பகுதியில் கார் ஒன்று ஆற்றுக்குள் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில், 16 வயது சிறுமி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதுடன், மற்றுமொரு சிறுவனைத் தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
நேற்று முன்தினம் சுமார் 8:20 மணியளவில் விஸ்பெக் செயின்ட் மேரி (Wisbech St Mary) பகுதியில் உள்ள ‘நார்த் பிரிங்க்’ (North Brink) சாலையில் பயணித்த கார் ஒன்று, கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த ‘நீன்’ (Nene) ஆற்றுக்குள் பாய்ந்தது.
இந்த காரில் 16 முதல் 18 வயதுக்குட்பட்ட ஐந்து இளைஞர்கள் பயணித்துள்ளனர்.
அவர்களில் இரண்டு சிறுமிகள் உட்பட ஒரு சிறுவன் காயங்களுடன் உயிர் தப்பிய நிலையில், இருவர் மாயமாகியிருந்தனர்.
மெட்ரோபொலிட்டன் பொலிஸ் பிரிவின் மூழ்காளர் குழுவினர் நடத்திய தேடுதல் வேட்டையில், ஆற்றுக்குள் மூழ்கிக் கிடந்த காருக்குள்ளேயே 16 வயது சிறுமி ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
இந்நிலையில் காணாமல் போன மற்றுமொரு சிறுவனைத் தேடும் பணிகள் தற்போதும் தொடர்ந்து வருகின்றன.
இருப்பினும், ஆற்றின் அலைகளின் ஓட்டம் மற்றும் கடினமான தட்பவெப்ப நிலை காரணமாக மீட்புப் பணிகள் மிகவும் சவாலாக அமைந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
நான்கு நிலையங்களைச் சேர்ந்த தீயணைப்புப் படையினரும் இந்த மீட்புப் பணியில் பொலிஸாருக்கு உதவி வருகின்றனர்.
காயமடைந்த மூன்று இளைஞர்களும் கிங்ஸ் லின் (King’s Lynn) பகுதியில் உள்ள குயின் எலிசபெத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களின் காயங்கள் உயிருக்கு ஆபத்தானவை அல்ல எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் விபத்து நடந்த நார்த் பிரிங்க் சாலை மிகவும் குறுகியதாக இருந்ததே விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் எனக் கருதப்படும் நிலையில், இச்சம்பவம் குறித்து ஏதேனும் தகவல் அல்லது கார் கமெரா (Dashcam) காட்சிகள் இருந்தால் உடனடியாகத் தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.












