அரச ஊழியர்களுக்கு ஏற்படுத்தப்பட்ட அவதூறை வன்மையாகக் கண்டிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ள அவர், இவ்வாறு கண்டனம் வெளியிட்டுள்ளார்.
அரச சேவையை நாட்டினால் சுமக்க முடியாதுள்ளதாகவும் அது நாட்டிற்கு சுமை எனவும் நிதி அமைச்சர் தெரிவித்த கருத்து, அரசாங்கத்தின் நிலைப்பாடு என எதிர்க்கட்சி நம்புவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டின் அரச சேவையை நீர்த்துப்போகச் செய்வதற்கு அரசாங்கம் தெரிந்தோ, தெரியாமலோ தயாராகி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரச சேவையின் ஓய்வூதிய வயதெல்லை அறுபதிலிருந்து 65 வரை அதிகரிக்கப்படுவதாக பிரபல்யமான யோசனையை வரவு செலவுத் திட்டத்தில் முன்வைக்கும் அமைச்சர், நாட்டின் அரச சேவை சுமை என மறுநாள் கூறுவதன் மூலம் அவரால் முன்வைக்கப்பட்ட நிலைப்பாடு அவராலேயே மீறப்படுவதாக அமைந்துள்ளதென எதிர்க்கட்சித் தலைவர் கூறியுள்ளார்.
தேர்தல் காலத்தில் போற்றப்படும் அரச ஊழியர்களை தமது நோக்கம் நிறைவேறிய பின்னர் அரசாங்கம் இவ்வாறு நடத்துவதென்பது அரசாங்கத்தின் உண்மையான பிம்பம் என்பதை அறிந்துள்ளதால் அது குறித்து வியப்படையவில்லை எனவும் சஜித் தெரிவித்துள்ளார்.