சூடானில் ஆட்சிக் கவிழ்ப்புக்கு எதிரான மக்கள் போராட்டத்தில் இதுவரை 15 பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜெனரல் அப்தெல் ஃபத்தா அல்-புர்ஹான் தலைமையிலான இராணுவம், ஆட்சியைக் கைப்பற்றி மூன்று வாரங்களுக்கும் மேலாக ஆகியுள்ள நிலையில், ஜனநாயக சார்பு ஆர்வலர்கள் வீதிகளில் ஆபத்தான போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
சூடானில் இராணுவ ஆட்சியை எதிர்த்து தலைநகர் கார்ட்டூம், சூடான் துறைமுகம், கஸாலா, டோங்கோலா, வாட் மடானி, ஜெனினா உள்ளிட்ட நகரங்களில் ஆயிரக்கணக்கானோர் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மேலும் 15 பேர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் சங்கம் தெரிவித்தது.
சூடானை கடந்த 1989ஆம் ஆண்டிலிருந்து ஆண்டு வந்த ஒமர் அல்-பஷீர், இராணுவத்தால் கடந்த 2019ஆம் ஆண்டு ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டார். அதன்பிறகு இராணுவம் மற்றும் அரசியல் தலைவர்களைப் பிரதிநிதிகளாக கொண்ட இறையாண்மை சபையில் உருவாக்கப்பட்டு, இடைக்கால அரசாங்கமும் அமைக்கப்பட்டது. அந்த அரசாங்கத்தின் பிரதமராக அப்தல்லா ஹாம்டோக் பொறுப்பேற்றார்.
இந்த நிலையில், அந்த அரசாங்கத்தை இராணுவம் கடந்த மாதம் 25ஆம் திகதி கலைத்தது. மேலும், நாட்டில் அவசரநிலையும் பிரகடனப்படுத்தப்பட்டது.
இந்த ஆட்சிக் கவிழ்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் தீவிர போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.