பலுசிஸ்தான் பல்கலைக்கழகத்தினைச் சேர்ந்த இரண்டு மாணவர்களை பாகிஸ்தான் இராணுவத்தினர் கடத்திச் சென்றமையைக் கண்டித்து போராட்டங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன.
அனைத்து கல்வி நிறுவனங்களிலும் வகுப்புகள் மற்றும் பரீட்சைகளைப் புறக்கணிக்குமாறு மாணவர் தலைவர்கள் அழைப்பு விடுத்துள்ளதாக எக்ஸ்பிரஸ் டெய்லி தெரிவித்துள்ளது.
கடத்தப்பட்டவர்கள் பலுசிஸ்தானின் நோஷ்கி மாவட்டத்தில் வசிக்கும் லால் மொஹமட்டின் புதல்வர்களான ஃபசிஹ் பலூச் சோஹைல் அஹமட் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
இவர்களை கடந்த திங்கட்கிழமையன்று பல்கலைக்கழக விடுதியில் இருந்து பாகிஸ்தான் இராணுவத்தினர் வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றதையடுத்து வலுக்கட்டாயமாக காணாமல் போயுள்ளதாக தி பலுசிஸ்தான் போஸ்ட் என்ற பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
அதேநேரம், பல்கலைக்கழக விடுதியில் இருந்தபோதே இவ்விரண்டு மாணவர்களும் காணாமல் போனதாக தெரிவித்த மாணவர் தலைவர்கள் ‘எமது நண்பர்கள் காணாமலாக்கப்பட்டமைக்காக நாங்கள் நிர்வாகத்திடம் எதிர்ப்பு தெரிவித்தோம், ஆனால் அதுதொடர்பில் எந்தக் கவனமும் எடுக்கவில்லை. பின்னர் நாங்கள் பல்கலைக்கழகத்தின் வாயிலில் எதிர்ப்பு போராட்டம் செய்ய வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டோம்’ எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
பலுசிஸ்தானைப் பொறுத்தவரையில் வலிந்து காணாமல்போகும் சம்பவங்கள் தொடர்பில் நீண்ட வரலாறு காணப்படுகின்றது. அங்கு ஆயிரக்கணக்கான பலூச்சுக்கள் கடத்தப்பட்டு காணாமல் போயுள்ளனர்.
கொலைகள் மூலம் நூற்றுக்கணக்கானவர்கள் அழிக்கப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கானவர்களுக்கு என்ன நடந்தது என்பதையே கண்டுபிடிக்க முடியாத நிலைமை காணப்படுகின்றது.
மனித உரிமைகள் அமைப்புக்கள் செயற்பட முடியாத நிலைமையும், ஊடகங்கள் குரல் எழுப்ப முடியாத நிலைமையும் நீடிப்பதால் அங்கு மேற்படி நிலைமைகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது.
பலுசிஸ்தானிலுள்ள ஒடுக்கப்பட்ட மக்களை ஆக்கிரமித்த முதல் நாளிலிருந்தே அவர்களை மௌனிகளாக வைத்திருப்பதற்கு பாகிஸ்தான் அரசு வலுக்கட்டாயமாக காணாமலாக்குதலை ஒரு கருவியாக பயன்படுத்தி வருகின்றது.
கடத்தப்பட்டவர்களில் பலர் கொல்லப்பட்டாலும் இன்னும் பலர் இராணுவ இரகசிய அறைகளில் மனிதாபிமானமற்ற சித்திரவதைகளை தற்போது வரையில் எதிர்கொண்ட வண்ணமுள்ளனர்.