சூடானில் பிரதமர் அப்தல்லா ஹாம்டோகிடம் ஆட்சியை மீண்டும் ஒப்படைக்க, இராணுவம் சம்மதம் தெரிவித்துள்ளது.
ஐ.நா. அமைப்பும் அமெரிக்காவும் முக்கியப் பங்கு வகித்த ராணுவத்துக்கும் அரசியல் தலைவர்களுக்கும் இடையேயான பேச்சுவார்த்தைக்கு பிறகு இதற்கான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பிறகு கைது செய்யப்பட்ட அரசியல் தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் அனைவரையும் விடுவிக்கவும் இராணுவம் சம்மதித்தது.
மீண்டும் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பிறகு, சுதந்திரமான ஓர் அமைச்சரவைக்கு ஹாம்டோக் தலைமை வகிப்பார்.
ஆட்சியில் தனது பிடியை இறுக்கும் வகையில் புதிய இறையாண்மை சபையை இராணுவம் அமைத்துள்ளது.
ஒப்பந்தம் குறித்த அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிடுவதற்கு முன் அந்தக் சபையில் இதுகுறித்து கூடி விவாதிக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
சூடானை கடந்த 198ஆம் ஆண்டிலிருந்து ஆண்டு வந்த ஒமர் அல்-பஷீர், இராணுவத்தால் கடந்த 2019ஆம் ஆண்டு ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டார். அதன்பிறகு இராணுவம் மற்றும் அரசியல் தலைவர்களைப் பிரதிநிதிகளாக கொண்ட இறையாண்மை சபையில் உருவாக்கப்பட்டு, இடைக்கால அரசாங்கமும் அமைக்கப்பட்டது. அந்த அரசாங்கத்தின் பிரதமராக அப்தல்லா ஹாம்டோக் பொறுப்பேற்றார்.
இந்த நிலையில், அந்த அரசாங்கத்தை இராணுவம் கடந்த மாதம் 25ஆம் திகதி கலைத்தது. மேலும், நாட்டில் அவசரநிலையும் பிரகடனப்படுத்தப்பட்டது.
இந்த ஆட்சிக் கவிழ்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் தீவிர போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. போராட்டங்களை ஒடுக்குவதற்காக பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 40 பேர் உயிரிழந்ததாக சூடான் மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது