மட்டக்களப்பு அம்பிட்டிய சுமணரட்ண தேரரை இடமாற்றினால்தான் தமிழ் மற்றும் சிங்கள உறவு மேலோங்கப்படும் என முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் ஈ.பி.ஆர்.எல்.எப்.பத்மநாபா மன்ற தலைவருமான இரா.துரைரெத்தினம் தெரிவித்துள்ளார்.
மேலும் அம்பிட்டிய சுமணரட்ண தேரர், பட்டிப்பளை பிரதேச செயலகத்தில் காணிப் பிரச்சினைக்காக கடந்த 15 திகதி சென்று, அரச உத்தியோகத்தர்களுக்கு எதிராக முறைகேடாக நடந்து கொண்டதை வன்மையாக கண்டிக்கின்றேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெத்தினம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த ஊடக அறிக்கையில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “ஒருசில பௌத்த குருமாரும், சுமணரட்ண தேரரும் இம்மாவட்டத்தில் கடந்த 11.11.2013ம் ஆண்டு முதல் தற்போது வரை பல்வேறு பிரச்சினைகளை ஏற்படுத்தி வருகின்றனர்.
அதாவது அண்மையில் (15.11.2021)பிரதேச செயலகத்தில் அரசஉத்தியோகத்தர்களை அச்சுறுத்தியது வரையும் இம் மதகுருவின் கெடுபிடிகள், தவறான நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டே செல்கின்றன.
இலங்கை அரசும் பௌத்த சாசன அமைச்சும் இலங்கை நிருவாக சேவையும் உத்தியோகத்தர்கள் சம்பந்தப்பட்ட அமைச்சும் மதகுருவின் வன்முறைத்தனத்தை நிறுத்துவது தொடர்பாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.
பௌத்த மதகுரு என்பதற்காகவா? இதே தவறை ஏனைய மதகுருக்கள் செய்திருந்தால் அரசு என்ன நடவடிக்கை எடுத்திருக்கும்.
இதனால் மிகவும் சிறப்பான முறையில் செயற்பட்டு வருகின்ற அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் மனஉளைச்சல் நிலைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.
இப்படிப்பட்ட செயற்பாடு ஒரு மதகுருவிற்கு ஏற்படையதல்ல. எனவே இந்த மதகுரு தொடர்பாக அரசாங்கம் துரிதமான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரும்பான்மையாக தமிழர்களாக வாழுகின்ற நாங்கள் பௌத்த மதகுருவை எதிர்க்கவில்லை.
ஆனால் வன்முறையில் ஈடுபடுவதையும் ஒரு மதகுருவிற்கு இருக்கப்பட வேண்டிய புனிதத் தன்மை இல்லாத இந்த மதகுருவை வெறுக்கின்றோம்.
எனவே, பௌத்தசாசன அமைச்சு இவரை இடமாற்றம் செய்வதற்கான விடயங்களை மேற்கொள்ளுமாறு வேண்டிக் கொள்வதோடு, இவர் இடமாற்றப்படும் பட்சத்தில் தமிழ் மற்றும் சிங்கள உறவு மேலோங்கப்படும்” என அவர் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.