யுத்த காலத்தில் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் விடுதலைப்புலிகளினால் புதைத்து வைக்கப்பட்டதாக கூறப்படும் தங்கத்தை மீட்க முயன்றதாக கூறப்படும் இரண்டு அமைச்சரவை அமைச்சர்களின் ஒருங்கிணைப்பு செயலாளர்கள் இருவர் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
பொது பாதுகாப்பு அமைச்சின் ஒருங்கிணைப்பு செயலாளர் மற்றும் மீன்பிடித்துறை அமைச்சின் ஒருங்கிணைப்பு செயலாளர் தொடர்பிலேயே இவ்வாறு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் தமது அமைச்சின் அதிகாரியை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
முன்னுரிமை அடிப்படையில் முழுமையான மற்றும் பாரபட்சமற்ற விசாரணைகளை முன்னெடுக்குமாறும் அவர் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
அத்துடன், இவ்வாறான சம்பவம் தொடர்பில் தமக்கு தெரியாது என தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தமது அமைச்சின் உறுப்பினர்கள் எவரேனும் இவ்வாறான செயலில் ஈடுபட்டிருந்தால் நடவடிக்கை எடுக்கப்பட்டு அந்த அதிகாரி பணி இடைநிறுத்தம் செய்யப்படுவார் எனவும் தெரிவித்துள்ளார்.