லத்தீன் அமெரிக்க நாடான ஹோண்டுராஸில், முதல் பெண் ஜனாதிபதியாக சியோமாரா காஸ்ட்ரோ தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
நேற்று (புதன்கிழமை) வெளியான ஜனாதிபதி தேர்தலின் முடிவுகளின் படி, சியோமாரா காஸ்ட்ரோ 53 சதவீத வாக்குகளைப் பெற்று வெற்றிப்பெற்றார்.
அவரை எதிர்த்து போட்டியிட்ட தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான டெகுசிகல்பா மேயர் நஸ்ரி அஸ்ஃபுரா, 34 சதவீத வாக்குகளைப் பெற்றார்.
அத்துடன், வெற்றிபெற்ற சியோமாரா காஸ்ட்ரோவுக்கு நஸ்ரி அஸ்ஃபுரா, வாழ்த்து தெரிவித்தார்.
இதன் மூலம் 12 ஆண்டுகளுக்கு பின்னர் ஹோண்டுராஸில் இடது சாரி கட்சி ஆட்சியை பிடித்துள்ளது. மேலும் இந்த வெற்றியின் மூலம் ஹோண்டுராஸின் முதல் பெண் ஜனாதிபதி என்ற பெருமையையும் சியோமாரா காஸ்ட்ரோ பெற்றுள்ளார்.
62 வயதான சியோமாரா காஸ்ட்ரோ, முன்னாள் ஜனாதிபதி மானுவல் ஜெலயாவின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.