நாட்டில் இந்த வருடத்தின் நேற்று(புதன்கிழமை) வரையான காலப்பகுதியில் 131 எரிவாயு கசிவினால் வெடிப்புச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
எரிவாயு சிலிண்டர் தீப்பற்றுதல் மற்றும் வெடிப்பது குறித்து ஆராய்ந்து தீர்வுகளை கண்டறிவதற்காக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட குழு இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளது.
மொரட்டுவ பல்கலைகழகத்தில் கூடி ஆராய்ந்த போதே குறித்த குழு இந்த விடயங்களை தெரிவித்துள்ளது.
இதில், எரிவாயு சிலிண்டருக்கு சிறு சேதம் – 05, எரிவாயு விநியோக குழாய் சேதம் – 09, ரெகுலேட்டருக்கு சேதம்- 10, எரிவாயு அடுப்பு வெடிப்பு- 56, வாயு கசிவுகள் – 47, அதிக வெப்பத்தால் ஏற்படும் விபத்துகள் – 04 என பதிவாகியுள்ளன.
தற்போது அவதானிக்கப்பட்டுள்ள சம்பவங்களின் அடிப்படையில் ஆபத்துக்களை தவிர்க்க அவசர நடவடிக்கை எடுக்கப்படுவதன் ஒரு அங்கமாக, பொதுமக்களுக்கு பின்வரும் பாதுகாப்பு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
01.நீங்கள் சந்தையில் இருந்து ஒரு எரிவாயு சிலிண்டரை வாங்கும் போது, அந்த சிலிண்டரில் இருந்து எரிவாயு கசிவு ஏதும் இல்லை என்பதை விற்பனை முகவரிடமிருந்து உறுதிப்படுத்திய பின்னர் வாங்குங்கள்.
02.எரிவாயு சிலிண்டரில் எரிவாயு கசிவை நீங்கள் கவனித்தால், அல்லது சந்தேகம் இருந்தால், வீட்டிலிருந்து அகற்றி, சரியான காற்றோட்டத்துடன் திறந்த இடத்தில் வைக்கவும்.
03.பிறகு உங்கள் எரிவாயு முகவரிடமும், அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கும் தகவல் வழங்குங்கள்.
இப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக நியமிக்கப்பட்ட விசேட ஜனாதிபதி குழுவிற்கு, பின்வரும் தொலைபேசி இலக்கங்களில் ஏதாவதொன்றை அழைத்து தகவல் தெரிவிக்கவும், (011 5 811 927 அல்லது 011 5 811 929)
04.எரிவாயு சிலிண்டர்களில் நிபுணத்துவம் பெற்ற ஒருவரால் சோதிக்கப்படும் வரை அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்படாத சோதனைகளை மேற்கொள்ள வேண்டாம். ஆபத்தில் இருக்கும் தொகுதிகளின் தேவையற்ற ஆய்வுகளைத் தவிர்க்கவும்.
5.அண்மைய சம்பவங்கள் எதிலும், எரிவாயு சிலிண்டரில் வெடிப்பு நிகழவில்லை. இந்த சம்பவங்கள் குறித்து ஏற்கனவே ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
விபத்துக்களைக் குறைப்பதற்கான விரைவான நடவடிக்கையாக, உங்கள் எரிவாயு சிலிண்டரில் உள்ள ரெகுலேட்டர், எரிவாயு விநியோக குழாய், எரிவாயு அடுப்பு இணைப்புக்கள் சரியாக இயங்குவதையும், எரிவாயு ஸ்டவ் சரியாக பொருத்தப்பட்டிருப்பதையும் உறுதி செய்து கொள்ளவும். பழுதடைந்த எரிவாயு அடுப்புகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.
6.இலங்கையின் தரநிலை நிறுவனத்தால் செய்யப்பட்ட பரிந்துரையின்படி, 51.5 ~ 1180 ரெகுலேட்டர்கள் மற்றும் 51-5 – 1172 எரிவாயு விநியோக குழாய் மற்றும் பாகங்களை பயன்படுத்துங்கள்.
ஒரு ரெகுலேட்டருக்கு பரிந்துரைக்கப்பட்ட ஆயுட்காலம் 05 ஆண்டுகள் மற்றும் எரிவாயு விநியோக குழாய்க்கு பரிந்துரைக்கப்பட்ட ஆயுட்காலம் 02 ஆண்டுகள் ஆகும்.
07.பணியிடங்கள் மற்றும் சிறிய தொழிற்சாலைகளில் எரிவாயுவைப் பயன்படுத்தும் போது, பயிற்சி பெற்ற தொழில்நுட்ப வல்லுநரின் ஆலோசனையைப் பெறவும் மற்றும் பொருத்தமான சுற்றுப்புற வெப்பநிலைக்கு இணங்கக்கூடிய துணைப் பொருட்களைப் பயன்படுத்துவதை உறுதி செய்யவும்.
08.வாயு கசிவு குறித்து எச்சரிக்கையாக இருங்கள். சிலிண்டரிலிருந்து வித்தியாசமான வாசனை வருகிறதா என்பதில் அவதானமாக இருங்கள்.
9.இந்த ஆண்டு ஏற்பட்ட விபத்துக்களில் அதிகமானவை அடுப்பின் கண்ணாடி உடைந்தது தொடர்பானவையே.
10.அடுப்பு பாவனை முடிந்ததும், ரெகுலேட்டரை அகற்றாமல், அடுப்பிற்கான எரிவாயு விநியோகத்தை நிறுத்தும் ஆழியை திருப்பி, எரிவாயு விநியோகத்தை நிறுத்துங்கள்.
11.சமையலறையில் எரிவாயு அடுப்பை இயக்க ஆரம்பிப்பதற் முன்னர் கதவுகள் மற்றும் ஜன்னல்களைத் திறந்து விடுங்கள். மேலும், எரிவாயு விநியோகத்திற்கு முன், அருகில் மின் இணைப்பு, மொபைல் போன்கள் போன்றவை தவிர்த்து விடுங்கள்.
இதேவேளை, இன்றைய தினமும் நாட்டின் சில பகுதிகளில் வெடிப்புச் சம்பவங்கள் பதிவாயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தநிலையில் எரிவாயு வெடிப்பு சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில் அதுகுறித்த முறைப்பாடுகளை அறிவிக்க பொதுமக்களுக்கு விசேட தொலைபேசி இலக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட 8 பேரடங்கிய குழுவின் தலைவர் பேராசிரியர் சாந்த வல்பெலகே இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய 0115811927 மற்றும் 0115811929 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு அறிவிக்க முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.