இராணுவத்தில் இருந்த ஜகத் ஜெயசூரிய, கபில எந்தவிதாரண, கரன்னகொட ஆகியோர் உண்மையில் குற்றவாளிகளே என முன்னாள் இராணுவத் தளபதியும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
நேற்று நாடாளுமன்றில் இடம்பெற்ற பாதுகாப்பு அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார்.
இலங்கை இராணுவத்திற்கு எதிராக யுத்த குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இராணுவத்தில் ஒருவர் இருவர் தவறிழைத்துள்ளனர் என்பதை ஒப்புக்கொண்டாலும் அவர்கள் இன்னும் தண்டிக்கப்படவில்லை என சரத் பொன்சேகா சுட்டிக்காட்டினார்.
எனவே பாடசாலை மாணவர்கள் 11 பேரை கடத்தி அவர்களின் பெற்றோரிடம் கப்பம் பெற்று இறுதியாக கொலை செய்த முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னகொட மற்றும் ஜகத் ஜெயசூரிய, கபில எந்தவிதாரண ஆகியோரை தண்டிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
இதேவேளை கைது செய்யப்பட்டு சிறையில் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப்புலி உறுப்பினர்களை விடுவிக்க தாமும் இணக்கம் தெரிவிப்பதாக சரத் பொன்சேகா தெரிவித்தார்.