மியன்மாரில் இராணுவத்தால் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்ட ஆங் சான் சூகிக்கு, நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்துக்கு எதிராக போராட்டங்களைத் தூண்டியதாகவும், கொரோனா தடுப்பு விதிகளை மீறியதாகவும் அவர் மீது சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டுகள் நிரூபணம் ஆகியுள்ளதால், இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
76 வயதாகும் ஆங் சான் சூகி, சிறைக்கு அனுப்படுவாரா அல்லது வீட்டுச் சிறையே தொடருமா என்று இன்னும் தெளிவாகவில்லை.
முன்னதாக ஊழல், அரச ரகசியங்கள் பாதுகாப்புச் சட்டத்தை மீறியது உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்டதாக ஆங் சான் சூகி மீது குற்றம்சாட்டப்படடமை குறிப்பிடத்தக்கது.
தென்கிழக்கு ஆசிய நாடான மியன்மாரில், கடந்த பெப்ரவரி முதலாம் திகதி ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை கவிழ்த்துவிட்டு ஆட்சி அதிகாரத்தை இராணுவம் கைப்பற்றியது.
தேர்தல் முறைகேடு காரணமாக ஆட்சியை கவிழ்த்ததாக விளக்கம் அளித்த இராணுவம், நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி, ஜனாதிபதி வின் மைன்ட் உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்களை கைது செய்து வீட்டு காவலில் வைத்தது.
இதனைத்தொடர்ந்து இராணுவ ஆட்சிக்கு எதிராகவும், ஆங் சான் சூகிக்கு ஆதரவாகவும் கிளர்ச்சிக் குழுவினர் மற்றும் பொதுமக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தநிலையில், ஆங் சான் சூகிக்கு நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பிறகு இராணுவ ஆட்சிக்கு எதிராக போராடியதற்காக கைது செய்யப்பட்ட 5,600க்கும் மேற்பட்டவர்களை கடந்த ஒக்டோபர் மாதம், இராணுவம் விடுவித்தமை நினைவுக்கூரத்தக்கது.