பாகிஸ்தான் – சியால்கோட்டில் கொடூரமாக கொல்லப்பட்ட இலங்கைப்பிரஜை பிரியந்த குமாரவின் பூதவுடல் இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை அவரின் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பிரியந்த குமார தியவடனவின் சடலம் கனேமுல்ல – கெந்தலியத்த பாலுவ பகுதியிலுள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, குடும்பத்தினரின் விருப்பப்படி இறுதிச் சடங்கு நடைபெறும் என்று அவரது மனைவி நிலுஷி தெரிவித்துள்ளார்.
பிரியந்த குமாரவின் பூதவுடல் நேற்று மாலை லாகூரில் இருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தில் கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டது.
இதன்போது, பிரியந்தவின் மனைவி மற்றும் அவரது ஏனைய குடும்ப உறுப்பினர்கள் உடனிருந்தனர் என தெரிவிக்கப்படுகிறது.
அதனையடுத்து, சடலம் நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டு, அங்கு பிரேத பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், சடலம் இன்று காலை குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் – சியல்கொட் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமையன்று இலங்கையைச் சேர்ந்த பொறியியலாளர் பிரியந்த குமார என்பவர் ஒரு கும்பலால் அடித்து எரியூட்டப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தார்.
குறித்த காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், இலங்கை அரச தலைவர்கள் உட்பட பலர் கண்டனம் வெளியிட்டிருந்தனர்.
அத்தோடு, இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை பிரதான சந்தேகநபர் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என பாகிஸ்தான் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.