குழுநிலை விவாதத்தை ஆரம்பித்து வைக்கும் எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்களின் பெயர் பட்டியலில் கூட்டமைப்பு திட்டமிட்டுப் புறக்கணிக்கப்படுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சபையில் தெரிவித்தது.
நாடாளுமன்றில் பேசுவதற்கு எதிர்க்கட்சி தரப்பில் தமக்கு நேரம் ஒதுக்குவதில்லை என்ற குற்றச்சாட்டினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் சபையின் கவனத்திற்கு கொண்டுவந்தார்.
கூட்டமைப்பு இவ்வாறு புறக்கணிக்கப்பட்டுள்ளமையானது தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட பாரிய அநீதி என்றும் தமிழ் மக்களுக்கு இதனூடாக எதிர்க்கட்சி தலைவர், அநீதி இழைத்துள்ளதாகவும் ஆளும்தரப்பினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
வரவு செலவுத் திட்ட குழு நிலை விவாதத்தை ஆரம்பித்து வைக்கும் எதிர்க்கட்சி எம்.பி.க்களின் பெயர் பட்டியலை சபாநாயகருக்கு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கையளித்துள்ளார்.
இந்த பட்டியிலில் 33 நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ள போதிலும் கூட்டமைப்பின் உறுப்பினர்களின் பெயர்கள் இதில் உள்வாங்கப்படவில்லை என சார்ள்ஸ் நிர்மலநாதன் குறிப்பிட்டார்.
கூட்டமைப்புக்கு அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சர்கள் இல்லை என்பதனால் எமது மக்கள் சார்ந்தப் பிரச்சினைகளை சபையில் பேச வேண்டும் எனவும் சார்ள்ஸ் நிர்மலநாதன் குறிப்பிட்டிருந்தார்.