2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணிக்கு நாடாளுமன்றில் இடம்பெறவுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான கூட்டணி அரசாங்கத்தின் 2022ஆம் நிதியாண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தை நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ கடந்த மாதம் 12ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.
அதனைத்தொடர்ந்து, வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் 13ஆம் திகதி ஆரம்பமாகி, 22ஆம் திகதி வரையில் 7 நாட்களுக்கு இடம்பெற்றது.
அதனைத் தொடர்ந்து, அன்று மாலை வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இடம்பெற்றது.
இதன்போது, வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 153 வாக்குகளும் எதிராக 60 வாக்குகளும் வழங்கப்பட்டிருந்தன.
அதற்கமைவாக 2022ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு 93 வாக்குகள் வித்தியாசத்தில் நிறைவேற்றப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, கடந்த மாதம் 23ஆம் திகதி முதல் ஆரம்பமான குழு நிலையிலான விவாதம் சனிக்கிழமை உள்ளடங்கலாக இன்று வரை 16 நாட்கள் இடம்பெறுகிறது.
இந்த நிலையிலேயே, குழுநிலை விவாதத்தின் இறுதி நாளான இன்று மாலை 5 மணிக்கு வரவுச் செலவு திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது.