சியல்கோட்டில் இலங்கை பிரஜை படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து உலமாக்கள் மற்றும் மத அறிஞர்கள் மற்றும் சமூகத்தின் ஏனைய பிரிவினர் இன்று (வெள்ளிக்கிழமை) ‘கண்டன தினமாக’ அனுஷ்டிக்கவுள்ளதாக மத நல்லிணக்கம் மற்றும் மத்திய கிழக்கு தொடர்பான பிரதமரின் விசேட பிரதிநிதி ஹாபிஸ் தாஹிர் மெஹ்மூத் அஷ்ரபி தெரிவித்தார்.
இந்த விடயம் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த உலமாக்கள் தங்கள் வெள்ளிக்கிழமை சொற்பொழிவுகளில் வெளிநாட்டினரைக் கொன்று குவிப்பதைக் கண்டிப்பார்கள் என்றும் தெய்வ நிந்தனைச் சட்டங்களை மக்களுக்கு உணர்த்துவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
தங்கள் தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலை முன்னெடுப்பதற்காக மதம் மற்றும் புனிதப் பெயர்களைப் பயன்படுத்துபவர்களுக்கு எதிராக தேசம் தனது பங்கை ஆற்றுவதற்கான நேரம் வந்துள்ளதாக அஷ்ரபி கூறினார். அதற்கமைய பாகிஸ்தான் அரசு ஏற்கனவே தீர்ப்பை வழங்கியுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.
தீவிரவாதத்தை ஒழிக்க அரசு மற்றும் தேசிய பாதுகாப்பு அமைப்புகளுக்கு மக்கள் துணை நிற்க வேண்டும் என கோரிக்கை விடுத்த அவர், நாடு முழுவதும் உலமா மற்றும் மஷெய்க் மாநாடுகள் ஏற்பாடு செய்யப்பட்டு, கல்வி நிறுவனங்களில் நிந்தனை சட்டங்கள் குறித்த விழிப்புணர்வு பிரசாரங்கள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.