“ 35 ஆயிரம் கண்கள் பாகிஸ்தானுக்கு எவ்வாறு சென்றது என்பதை தெளிவு படுத்த வேண்டும்” என்று அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் கண்டன பேரணியில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.சர்வதேச மனித உரிமை தினத்தை முன்னிட்டு கடந்த 10 ஆம் திகதி கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நற்பிட்டிமுனையில் அமைந்துள்ள மனித உரிமை ஆணைக்குழுவின் பிராந்திய காரியாலயத்திற்கு முன்பாக இடம்பெற்ற போராட்டத்தின் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளனர்.
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மட்டுமில்ல அண்மை வாரங்களாக தமிழ் மக்கள் மத்தியில் உள்ள ஒரு பகுதி அரசியல் செயற்பாட்டாளர்கள் மத்தியில் இவ்வாறு ஒரு சந்தேகம் எழுந்திருக்கிறது. இதற்கு காரணம் பாகிஸ்தானில் அடித்துக் கொல்லப்பட்ட பின் எரிக்கப்பட்ட பொறியியலாளரான பிரியந்த குமார என்பவருடைய மரணம் தொடர்பாக அங்குள்ள முன்னணி கண் மருத்துவர் ஒருவர் தெரிவித்த கருத்துக்கள் தான்
பாகிஸ்தானைச் சேர்ந்த முன்னணி கண் மருத்துவரான நியாஸ் புரோகி பின்வருமாறு கருத்து தெரிவித்திருந்தார்…..” ஸ்ரீலங்கா எங்களுக்கு முப்பத்தி ஐயாயிரம் விழிகளைத் தானம் செய்திருக்கிறது ஆனால் நாங்களோ பார்வை இழந்துவிட்டோம்”. நியாஸ் புரோகியின் மேற்படி கருத்துக்கள் தமிழ் மக்கள் மத்தியில் ஒரு தரப்பினரால் வேறு விதமாக பார்க்கப்படுகின்றன.
35000 விழிகளை பாகிஸ்தானுக்கு இலங்கை தானம் செய்திருக்கிறது என்று சொன்னால் அந்த விழிகளை எங்கிருந்து அவர்கள் பெற்றுக் கொண்டார்கள்? இறுதிக்கட்டப்போரில் காணாமல் ஆக்கப்பட்டவர்களிடமிருந்து அவர்கள் அதைப் பெற்றுக் கொண்டார்களா ? என்பதே அந்தச் சந்தேகம். இந்த சந்தேகத்தின் விளைவாகத்தான் கடந்த மனித உரிமைகள் தினத்தின்போது அம்பாறை மாவட்டத்தில் நடந்த காணாமல் ஆக்கப்பட்டோருக்கான போராட்டத்தில் மேற்கண்டவாறு கேட்கப்பட்டிருக்கிறது.
முதலாவதாக இக்கேள்விக்கு காரணமான மருத்துவர் நியாஸ் புரோகியின் கூற்றினை அதன் வரலாற்றுப் பின்னணிக்கூடாக விளங்கிக்கொள்ள வேண்டும்.பாகிஸ்தான் போன்ற இஸ்லாமிய நாடுகளின் மத நம்பிக்கைகளின்படி இறந்துபோன ஒருவரின் உடலை அடக்கம் செய்யும்போது அதில் எந்த ஒரு உறுப்பும் அகற்றப்பட்டிருக்கக்கூடாது.
இந்த மத நம்பிக்கை காரணமாக இறந்தவர்களின் உடல்களிலிருந்து உறுப்புக்களை தானம் செய்வது அங்கே தடுக்கப்பட்டிருக்கிறது. அதனால்தான் பாகிஸ்தான், எகிப்து,சூடான் போன்ற இஸ்லாமிய நாடுகள் ஏனைய நாடுகளிடமிருந்து உறுப்புகளை தானமாக பெறுகின்றன.குறிப்பாக விழிகளைத் தானமாகப் பெறுகின்றன.இந்த அடிப்படையில்தான் இலங்கை தீவிலிருந்து பாகிஸ்தான் கடந்த அரை நூற்றா ண்டுக்கும் மேலாக சுமார் 35,000 விழிகளைத் தானமாகப் பெற்றிருக்கிறது.
உலகிலேயே ஆண்டுதோறும் அதிகளவில் விழிகளை தானம் செய்யும் நாடுகளின் இலங்கைத்தீவு முன்னணியில் நிற்கிறது. ஆண்டுதோறும் இலங்கை தீவு 3000 விழிகளை தானம் செய்கிறது. இந்த விழிகள் பெரும்பாலும் இறந்தவர்களிடமிருந்து பெறப்படுகின்றன. கொழும்பிலுள்ள ஜெயரத்ன மலர் சாலையில் ஒவ்வொரு மாதமும் வரும் உடல்களில் குறைந்தது ஆறு உடல்களாவது விழிகளை தானம் செய்தவைகளாக இருக்கும் என்று அம்மலர்ச்சாலையின் நிர்வாகம் தெரிவிக்கின்றது.
இவ்வாறு தானம் செய்பவர்களுள் பிக்குகளும் அரசியல் தலைவர்களும் அடங்குவர். குறிப்பாக இலங்கை தீவின் இரண்டு பிரதமர்கள் அவ்வாறு தமது விழிகளை தானம் செய்திருக்கிறார்கள்.இவர்களில் ஒருவர் தமிழ் மக்களால் அரசியல் குள்ளநரி என்று வர்ணிக்கப்படும் ஜெயவர்த்தன.அவருடைய விழிகள் இரண்டு ஜப்பானியர்களுக்கு தானமாக வழங்கப்பட்டன .
விழிகளை தானம் செய்யும் ஒரு பாரம்பரியம் ஸ்ரீலங்காவில் 1964ஆம் ஆண்டு தொடங்கியது. அது ஒருவிதத்தில் பௌத்த மத நம்பிக்கைகளின் அடிப்படையிலானது.பௌத்தர்கள் மத்தியில் உள்ள தானம் வழங்கும் செயற்பாடுகளில் உச்சமானது உறுப்புக்களை தானம் செய்யும் ஒரு நடைமுறையாகும்.அவ்வாறு தானம் செய்வதன் மூலம் புண்ணியத்தைச் சம்பாதிக்கலாம் என்று பௌத்தர்கள் நம்புகிறார்கள்.தமது கர்மவினையை அகற்றுவதற்கு அந்த தானம் உதவும் என்றும் அவர்கள் நம்புகிறார்கள். அடுத்த பிறப்பில் ஆரோக்கியமான விழிகளை பெறுவதற்கு இப்பிறப்பில் இறந்தபின் விழிகளை தானம் செய்யவேண்டும் என்று பெரும்பாலானவர்கள் நம்புவதாக பிபிசி மற்றும் பொக்ஸ் நியூஸ் இணையதளங்களில் வெளியான இரண்டு கட்டுரைகள் தெரிவிக்கின்றன.
2012ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பொக்ஸ் நியூஸ்-fox news-இல் இது தொடர்பாக ஒரு விரிவான கட்டுரை பிரிக்கப்பட்டிருக்கிறது. மற்றொரு கட்டுரை 2016 பிப்ரவரி மாதம் பிபிசி நியூஸ் இல் பிரசுரிக்கப்பட்டுள்ளது. இவ்விரண்டு கட்டுரைகளிலும் கிடைக்கும் தகவல்களின்படி 1964ஆம் ஆண்டு மருத்துவர் ஹட்சன் சில்வா கண்தான இயக்கத்தை தொடங்கினார்.தொடக்கத்தில் மிகச்சில தூக்குத் தண்டனை கைதிகளின் விழிகள் தானமாகக் கொடுக்கப்பட்டன.
எனினும் காலப்போக்கில் அது ஒரு தொடர் இயக்கமாக மாறியது.2014ஆம் ஆண்டுவரை கண்தான இயக்கம் அறுபதினாயிரம் விழி வெண் படலங்களைத் தானம் செய்திருக்கிறது. 2014 ஆம் ஆண்டு மட்டும் மேற்படி கண்தான இயக்கம் 2551 விழிவெண் படலங்களை பல்வேறு நாடுகளுக்கு தானம் செய்திருக்கிறது. இதில் ஆயிரம் சீனாவுக்கும், 850 பாகிஸ்தானுக்கும், 250 தாய்லாந்துக்கும், 50க்கும் ஜப்பானுக்கும் தானம் செய்யப்பட்டன. ஆண்டுதோறும் ஸ்ரீலங்கா 3000 விழிவெண் படலங்களை 50 நாடுகளுக்கு தானம் செய்து வருகிறது.
இவ்வாறு கடந்த அரை நூற்றாண்டுக்கு மேலாக ஸ்ரீலங்காவின் கண்தான இயக்கமானது சிங்கள-பௌத்த பண்பாட்டின் பெருமைக்குரிய ஒரு பாரம்பரியமாகவும் மாறியிருக்கிறது, பௌத்த ஜாதகக் கதைகளில் வரும் புத்தரின் அவதாரம் என்று கருதப்படும் போதிசத்துவர் ஒரு மன்னனாக பிறந்த பொழுது அவரது விழிகளில் ஒன்றைத் தானமாக கேட்ட ஒரு கண்பார்வையற்ற பிச்சைக்காரனுக்கு அதை தானமாக கொடுத்தார்.
இந்த ஜாதகக் கதையும் சிங்கள-பௌத்த பண்பாட்டின் கண்தான பாரம்பரியத்தை ஊக்குவிக்கின்றது. இவ்வாறான ஒரு கண்தான பாரம்பரியத்தின் பின்னணியில்தான் பாகிஸ்தானிய கண் மருத்துவரான நியாஸ் புரோகி மேற்கண்டவாறு தெரிவித்திருக்கிறார். இலங்கையரான பிரியந்த குமார பாகிஸ்தானிய மத வெறியர்களால் கொடுமையாக கொல்லப்பட்டு எரிக்கப்பட்ட சம்பவத்தால் ஏற்பட்ட குற்ற உணர்ச்சி காரணமாக அவர் அவ்வாறு கூறியிருக்கிறார்.
ஆனால் அது தமிழ் மக்கள் மத்தியில் உள்ள சில செயற்பாட்டாளர்களை வேறுவிதமாக சிந்திக்க வைத்திருக்கிறது. அவர்கள் சந்தேகிக்கிறார்கள் கடைசிக் கட்டப் போரில் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விழிகளே அவ்வாறு பிடுங்கப்பட்டு தானமாக செய்யப்பட்டனவா ?என்று.
அவர்கள் அவ்வாறு சிந்திப்பதற்கு காரணம் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு இன்றுவரையிலும் நீதி கிடைக்காததுதான். மற்றொரு காரணம் இறுதிக்கட்ட போரில் எத்தனை பேர் கொல்லப்பட்டார்கள், காணாமல் ஆக்கப்பட்டார்கள் என்பது தொடர்பான திருத்தமான புள்ளி விவரங்கள் இல்லாமல் இருப்பதுதான்.இறுதிக்கட்டப் போரில் எத்தனைபேர் கொல்லப்பட்டார்கள் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் என்ற முறையான புள்ளிவிவரங்கள் இன்று வரையிலும் தொகுக்கப்படவில்லை. இது தகவல் யுகம் என்று கூறுகிறோம் ஆனால் இறுதிக்கட்டப் போரை குறித்து இலங்கைதீவில் விஞ்ஞானபூர்வமாக தொகுக்கப்பட்ட புள்ளிவிவரங்கள் எவையும் கிடையாது.
முன்னாள் மன்னார் ஆயர் ராயப்பு ஜோசப் அவர்கள் அவ்வாறு கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து நாற்பதாயிரத்துக்கும் அதிகம் என்று கூறினார்.தமிழ் அரசியல்வாதிகளில் ஒரு பகுதியினரும் செயற்பாட்டாளர்களில் ஒரு பகுதியினரும் அதை நம்புகிறார்கள்.ஆனால் ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்ட புள்ளி விவரங்களின்படி 40 ஆயிரத்துக்கும் 60ஆயிரத்துக்கும் இடைப்பட்ட தொகையினர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இந்த இரண்டு புள்ளிவிபரங்களுக்கும் இடையில் பாரதூரமான இடைவெளி உண்டு.
அதாவது, இறுதிகட்டப் போரில் தமிழ்த் தரப்புக்கேற்பட்ட சேதவிவரம் தொடர்பாக மிகச்சரியான ஒரு புள்ளி விபரத்தைத் திரட்டக்கூடிய ஓர் அரசியல் சூழல் இன்றுவரை ஏற்படவில்லை. இதுதான் மேற்கண்டவாறான சந்தேகங்களுக்கு காரணம். எனினும் அரசியலை ஓர் அறிவியல் ஒழுக்கமாக அறிவியல் பயில்வாக அணுகும் இக்கட்டுரையானது பின்வரும் விடயங்களைச் சுட்டிக்காட்ட விரும்புகிறது.
முதலாவது,இலங்கைத்தீவு அரை நூற்ராண்டுக்கும் மேலான ஒரு கண் தானப் பாரம்பரியத்தைக் கொண்டிருக்கிறது. மேற்கண்ட பாகிஸ்தானிய கண் மருத்துவர் சுட்டிக் காட்டியது அவ்வாறு அரை நூற்றாண்டுக்கும் மேலாக தானம் செய்யப்பட்ட கண்களின் மொத்தத் தொகையைத்தான்
இரண்டாவது, கடைசிக் கட்டப் போர் நிகழ்ந்த காலகட்டத்தில் எவ்வளவு கண்கள் தானம் செய்யப்பட்டன என்பது பற்றிய சரியான புள்ளி விபரம் வேண்டும். இங்கு ஒரு விடயத்தை சுட்டிக்காட்ட வேண்டும். கண்ணைத் தானம் செய்வதென்றால் ஒருவர் இறந்து அல்லது கொல்லப்பட்டு எட்டு மணித்தியாலங்களுக்குள் கண்கள் அகற்றப்பட வேண்டும்.அவ்வாறு அகற்றப்பட்ட கண்களை சில கிழமைகளுக்கே சேமித்து வைக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.எனவே கடைசிக் கட்டப் போர் நிகழ்ந்த காலகட்டத்தில் தானம் செய்யப்பட்ட கண்கள் பற்றிய சரியான புள்ளி விபரங்கள் இல்லாமல் ஊகத்தின் அடிப்படையில் முடிவுகூற முடியாது
மூன்றாவது, கடைசிக் கட்டப் போரில் கொல்லப்பட்டவர்கள் தொடர்பான ஒளிப்படங்கள் எதிலும் உடல்களில் கண்கள் அகற்றப்பட்டதற்கான சான்றுகள் இல்லை.
எனவே 35000 கண்கள் பற்றிய ஊகமானது, இறந்தகாலத்துக்குப் பொறுப்புக் கூறத் தயாரற்ற ஆசாங்கத்தின் மீதான அவநம்பிக்கையிலிருந்தே எழுகிறது. குறிப்பாக சிறைக்கைதியாக இருந்த குட்டிமணியின் கண்களைக் தோண்டிய ஒரு பண்பாட்டின் மீதான அவநம்பிக்கைதான். தன்னைத் தூக்கிலிட்ட பின் தனது கண்களைத் தானம் செய்யுங்கள் என்று குட்டிமணி கூறியதாலேயே அவருடைய கண்கள் தோண்டப்பட்டன.ஒரு கைதியின் கண்களைத் தோண்டிய ஒரு பண்பாடு உலகத்துக்கு கண்களைத் தானம் செய்கிறது என்பதுதான் இலங்கைத்தீவின் பண்பாட்டு அகமுரணாகும். உலகத்துக்கு அதிக விழிகளை வழங்கிய ஒரு நாடு தமிழர்களின் கூட்டுரிமைகள் தொடர்பில் ஏன் குருடாயிருக்கிறது?
-நிலாந்தன்-