இந்தியாவில் ஒமிக்ரோன் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 68 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை மகாராஷ்டிரா மாநிலத்தில் மாத்திரம் 32 பேருக்கு ஒமிக்ரோன் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிவத்துள்ளது.
இதனையடுத்து மருத்துவமனைகளில் ஒக்சிஜன் விநியோகம் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
இதேவேளை இந்தியாவில் நேற்று (புதன்கிழமை) ஒரேநாளில் 8 ஆயிரத்து 39 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ளோரின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 47 இலட்சத்து 18 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இவர்களில் 3 கோடியே 41 இலட்சத்து 46 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
அதேநேரம் 95 ஆயிரத்திற்கும் அதிகமான தொற்றாளர்கள் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இவர்களில் 8 ஆயிரத்திற்கும் அதிகமானவர்களின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 247 பேர் நேற்று ஒரேநாளில் உயிரிழந்துள்ள நிலையில்இ உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 4 இலட்சத்து 76 ஆயிரத்தைக் கடந்துள்ளது.