அமெரிக்க டொலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு, கடந்த வாரம் சுமார் இரண்டு சதவீதம் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஏழு மாதங்களில் பதிவான வலுவான வாராந்திர முன்னேற்றமாக இது அமைந்துள்ளதாகப் பொருளாதாரச் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த வார இறுதியில், ஒரு அமெரிக்க டொலருக்கு எதிராக இந்திய ரூபாய் 94 ரூபாய் 96 சதம் என்ற நிலையில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. இதற்கு முன்னர், ரூபாயின் மதிப்பு வரலாற்றில் இல்லாத அளவுக்கு சரிவடைந்து, ஒரு டொலருக்கு 96 ரூபாய் 96 சதம் வரை சென்றிருந்தது.
இந்தச் சரிவைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்திய ரிசர்வ் வங்கி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. குறிப்பாக, அரசுக்குச் சொந்தமான எண்ணெய் நிறுவனங்களுக்காக டொலர் பரிவர்த்தனைக்கான சிறப்பு வசதி அறிமுகப்படுத்தப்பட்டது.
வெளிநாட்டுச் செலாவணி ஒப்பந்தங்கள் தொடர்பான விதிமுறைகளும் கடுமையாக்கப்பட்டதுடன், ஊக வணிகத்தைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டன.
மேலும், வெளிநாட்டுச் செலாவணி சந்தையில் டொலர்களை விற்பனை செய்வதன் மூலம் ரூபாயின் மதிப்புக்கு ஆதரவளிக்கும் நடவடிக்கைகளையும் ரிசர்வ் வங்கி மேற்கொண்டதாகச் சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியச் சந்தையிலிருந்து பணத்தைத் திரும்பப் பெறுவது, நாட்டின் வர்த்தகப் பற்றாக்குறை அதிகரிப்பது போன்ற காரணிகள் ரூபாயின் மதிப்புக்கு தொடர்ந்து அழுத்தத்தை ஏற்படுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.

















