பெய்ஜிங்கில் உள்ள தங்கள் நாட்டின் இறுதி அதிகாரியும் வெளியேற்றப்பட்டதையடுத்து, லித்துவேனியாவின் தூதரகம் மூடப்பட்டது.
இதுதொடர்பாக லிதுவேனிய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சீனாவில் தூதரக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். தூதரக செயற்பாடுகள் தொடர்பான தொழில்நுட்ப அம்சங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
இதேபோல், லிதுவேனியாவில் சீன தூதர்களின் அங்கீகாரத்தை புதுப்பிப்பது தொடர்பான சீனாவின் முடிவு நிலுவையில் உள்ளது.
சீனாவுடனான பேச்சுவார்த்தையைத் தொடரவும், பரஸ்பர நன்மை பயக்கும் உடன்பாடு எட்டப்பட்டவுடன் தூதரகத்தின் செயற்பாடுகளை முழுமையாக மீட்டெடுக்கவும் லிதுவேனியா தயாராக உள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாய்வானுக்கு மறைமுகமாக தனி நாடு அங்கீகாரம் அளிக்கும் வகையில், தாய்வானுக்கான பிரதிநிதித்துவ அலுவலகத்தை தங்கள் நாட்டில் திறக்க லிதுவேனியா அனுமதித்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அந்த நாட்டுக்கான தூதரக அந்தஸ்தை சீனா குறைத்தது. லிதுவேனியாவுக்கான தங்கள் நாட்டுத் தூதரை திரும்ப அழைத்ததுடன், அந்த நாட்டின் தூதரையும் சீனா வெளியேற்றியது. இதன் காரணமாக இருநாட்டு உறவில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
தாய்வானை தனது நாட்டின் பிராந்தியம் என கருதும் சீனா, தாய்வானை தம்முடன் இணைக்கப் போவதாக கூறிவருகின்றது. ஆனால், தாங்கள் இறையாண்மை கொண்ட அரசாங்கம் என உறுதிபட தாய்வான் கூறியுள்ளது.