சீனாவுக்கு எப்போதுமே ரஷ்யா துணை நின்றுள்ளது என சீன ஜனாதிபதி ஸி ஜின் பிங் தெரிவித்துள்ளார்.
காணொளி வாயிலாக நடைபெற்ற இருநாட்டு தலைவர்களுக்கான சந்திப்பிற்கு பின்னர், சீன ஜனாதிபதி ஸி ஜின் பிங் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘முக்கிய தேசிய நலன்களைப் பாதுகாப்பதற்கான சீனாவின் முயற்சிகளை வலுவாக ஆதரித்தது மற்றும் நமது நாடுகளுக்கு இடையே பிளவை ஏற்படுத்தும் முயற்சிகளை உறுதியாக எதிர்த்தது ஆகியவற்றை நான் மிகவும் பாராட்டுகிறேன்.
சீனாவுக்கு எப்போதுமே ரஷ்யா துணை நின்றுள்ளது. எங்களின் தேசிய நலன்களைக் காக்கும் முயற்சிகளை ரஷ்யா எப்போதுமே ஆதரித்துள்ளது’ என கூறினார்.
இதனைத்தொடர்ந்து உரையாற்றிய ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின், ’21ஆம் நூற்றாண்டில் ரஷ்யா, சீனா இடையேயான நட்புறவு இருநாட்டு ஒத்துழைப்புக்கான சிறந்த உதாரணம். நம் இரு நாடுகளுக்கும் இடையே புதுமாதிரியான ஒத்துழைப்பு உருவாகியுள்ளது.
இந்த ஒத்துழைப்பு இருநாடுகளும் மற்றவரின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிடுவதில்லை. நாம் இருவரும் பகிர்ந்து கொள்ளும் எல்லையை நிரந்த அமைதிப் பகுதியாக வைத்துள்ளோம். நாம் சிறந்த அண்டைநாட்டு நட்புறவை பேணுகிறோம்’ என கூறினார்.
அத்துடன் எதிர்வரும் ஆண்டு பெப்ரவரி மாதம், ஸி ஜின்பிங்கை, சீனாவில் நேரில் சந்திக்க திட்டமிட்டுள்ளதாக புடின் கூறியுள்ளார்.
மேலும், ஏற்கெனவே ஒப்புக்கொண்டபடி சீனாவில் நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளின் ஆரம்ப விழாவில் கலந்து கொள்வேன் என தெரிவித்தார்.
கடந்த 2013ஆம் ஆண்டு முதல் ரஷ்ய ஜனாதிபதி புடினும், சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங்கும் இதுவரை 30 முறை சந்தித்துள்ளனர்.