நீலகிரி மாவட்டத்தில் இடம்பெற்ற ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி உயிரிழந்த, குரூப் கேப்டன் வருண் சிங்கின் உடல் போபாலில் இன்று தகனம் செய்யப்பட இருக்கின்றது.
கடந்த 8 ஆம் திகதி, நீலகிரி மாவட்டத்தில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் மற்றும் இராணுவ வீரர்கள் என 13 பேர் உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் கேப்டன் வருண் சிங் 80 சதவீத தீக்காயங்களுடன் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், பெங்களூருவில் உள்ள விமானப்படை வைத்தியசாலையில் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி வருண்சிங் நேற்று முன்தினம் உயிரிழந்தார்.
இவ்வாறு வீரமரணம் அடைந்த வருண் சிங்கின் உடல், நேற்று காலை பெங்களூருவிலுள்ள எலகங்கா விமானப்படை தளத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
இதன்போது அவரது உடலுக்கு முதலமைச்சர் பசவராஜ் பொம்மை உட்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள் என பலரும் அஞ்சலி செலுத்தினர்.
அதனைத் தொடர்ந்து அவரது உடல், நேற்று காலை 10 மணிக்கு சிறப்பு விமானம் ஊடாக மத்திய பிரதேச மாநில தலைநகர் போபாலுக்கு கொண்டு செல்லப்பட்டு,மதியம் 3 மணிக்கு அவரது உடல் போபாலை சென்று அடைந்தது. அங்கு அவரது குடும்பத்தினர் உட்பட பலர் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில் அவரது உடலுக்கு இன்று இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டு, இராணுவ மரியாதையுடன் தகனம் செய்யப்படும் என்று பாதுகாப்பு துறை அறிவித்துள்ளது.