இந்த ஆண்டு பிலிப்பைன்ஸைத் தாக்கிய மிக சக்திவாய்ந்த வெப்பமண்டல புயல்களில் ஒன்றான உள்ளூரில் ஓடெட் என்று அழைக்கப்படும் சுப்பர் சூறாவளி ராய், தென்கிழக்கு ஆசிய நாட்டின் தெற்கு மற்றும் மத்திய பகுதிகளை தாக்கிய பின்னர் பலவீனமடைந்துள்ளது.
இப் புயலினால், இதுவரை ஒரு மரணம் பதிவாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அத்துடன், ஆயிரக்கணக்கான மக்கள் நிவாரண முகாம்களில் தஞ்சமடைய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
இந்த ஆண்டு பிலிப்பைன்ஸைத் தாக்கும் 15வது சூறாவளியான ராய், கனமழை மற்றும் பரவலான வெள்ளத்தைக் கொண்டு வந்தது.
இதனால், டசன் கணக்கான விமானங்கள் இரத்து செய்யப்பட்;டது. மேலும் பல துறைமுகங்களில் செயற்பாடுகள் முடங்கியுள்ளன.
இதனால் 4,000 பயணிகள், ஓட்டுநர்கள் மற்றும் சரக்கு உதவியாளர்கள் சிக்கித் தவிக்கின்றனர்.
அத்துடன், புயல் காரணமாக நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வெகுஜன தடுப்பூசி செலுத்தும் பணிகளை பிலிப்பைன்ஸ் ஒத்திவைத்தது.
மத்திய கிழக்குக் கடற்கரையில் உள்ள பிரபலமான சுற்றுலா மற்றும் சர்ஃபிங் தலமான சியார்காவ் தீவில் வியாழக்கிழமை கரையைக் கடந்த பிறகு, 5ஆவது வகையிலிருந்து 3ஆவது வகை புயலாக சற்று வலுவிழந்தது. இது இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகுதியில் நாட்டை விட்டு வெளியேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆரம்பத்தில் மணிக்கு 260 கிலோமீட்டர் (மணிக்கு 160 மைல்) வேகத்தில் வீசிய புயல், மணிக்கு 300 கிலோமீட்டர் (மணிக்கு 185 மைல்) வேகத்துடன் மேற்கு நோக்கி நகர்ந்து.
மற்ற பாதிக்கப்பட்ட பகுதிகளில் சூரிகாவோ டெல் நோர்டே மாகாணம் மற்றும் சூரிகாவோ டெல் சுரின் சில பகுதிகளும் அடங்கும் என்று பிலிப்பைன்ஸின் தேசிய கிரிட் கார்ப்பரேஷன் தெரிவித்துள்ளது. போஹோல் மாகாணம் மற்றும் அகுசன் டெல் சுரின் சில பகுதிகளும் புயலால் பாதிக்கப்பட்டுள்ளன.
வெள்ளிக்கிழமை பிலிப்பைன்ஸின் பல பகுதிகளில் தகவல் தொடர்பு மற்றும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது, இது மீட்பு முயற்சிகளை கடினமாக்கியது. செயலிழப்பு காரணமாக ஏற்பட்ட சேதத்தின் அளவை அதிகாரிகளால் தீர்மானிக்க முடியவில்லை.
ராய் சூறாவளி, வியட்நாம் மற்றும் சீனாவின் ஹைனான் மாகாணத்தில் ஓரளவு மழையைப் பரப்பும், ஆனால் இதன் தாக்கம் குறிப்பிடத்தக்கதாக இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வானிலை அதிகாரிகளின் கூற்றுப்படி, ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 20 சூறாவளிகள் தீவுக்கூட்டத்தைத் தாக்குகின்றன.