2017 ஆம் ஆண்டு கொழும்பில் உள்ள சீனத் தூதரகம் தமிழ் ஊடகவியலாளர் 10 பேருக்கு சீனா சென்றுவர ஏற்பாடுகளைச் செய்து கொடுத்தது. சீனப் பயணத்தின்போது தமிழ் ஊடகவியலாளர்கள் மத்தியில் உரையாற்றிய சீன அரசாங்கத்தின் பிரதானி ஒருவர் பின்வரும் தொனிப்பட கருத்து தெரிவித்துள்ளார்.
யுத்த காலத்தில் சீனா மட்டுமல்ல இந்தியா அமெரிக்கா உள்ளிட்ட பெரும்பாலான உலக நாடுகள் அரசாங்கத்திற்கு உதவின. யுத்தம் முடிந்தபின் தமிழ் மக்கள் இந்தியாவை நோக்கிப் போகிறார்கள் ஆனால் சீனாவை நோக்கி வருகிறார்கள் இல்லை என்று. அவர் கூறியது உண்மை. கடந்த 11 ஆண்டுகளுக்கும் மேலாக ஈழத் தமிழர்கள் இந்தியாவை நோக்கித்தான் அதிகமாக போகிறார்கள். சீனாவை நோக்கி அனேகமாக போகவில்லை.
அதேபோல யுத்தத்தில் சீனா மட்டும் தான் இலங்கை அரசாங்கத்தை பலப்படுத்தியது என்பதல்ல. இந்தியா அமெரிக்கா உள்ளிட்ட பெரும்பாலான நாடுகள் அதை செய்தன. அரசாங்கத்துக்கு எதிரான முதலாவது ஐநா தீர்மானம் ஜெனிவாவில் நிறைவேற்றப்படும் பொழுது தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்த கியூபாவின் பிரதிநிதி ஆற்றிய உரையில் அதை சுட்டிக்காட்டியிருந்தார்.
போர்க் காலத்தில் இலங்கை அரசாங்கத்துக்கு 60 வீதமான ஆயுதங்களை வழங்கிய நாடுகளே இப்பொழுது அரசாங்கத்தின் போர்க்குற்றங்களுக்கு எதிராக ஒரு பிரேரணையை முன் நகர்கின்றன என்று.
அதுவும் உண்மைதான். சீனா மட்டுமல்ல உலகப் பேரரசுகள் எல்லாமே தமிழ் மக்களுக்கு எதிரான அந்த யுத்தத்தில் அரசாங்கத்துக்கு ஆயுதங்களை வழங்கின. தகவல்களை வழங்கின. ராஜதந்திர உதவிகளை வழங்கின. குறிப்பாக விடுதலைப் புலிகள் இயக்கத்தை தனிமைப்படுத்த உதவின.
இப்படிப்பட்ட ஒரு பின்னணியில் தமிழ் மக்கள் ஏன் சீனாவை நோக்கி வரக்கூடாது என்ற அந்த சீனப் பிறதானியின் கேள்வி தர்கபூர்வமானது.
ஆனால் இங்கு தமிழ் மக்கள் விளங்கிக் கொள்ள வேண்டிய விடயம் என்னவென்றால் உலகிலுள்ள எந்த ஒரு வெளியரசும் இலங்கைத் தீவை அணுகும்பொழுது அரசுக்கும் அரசுக்கும் இடையிலான கட்டமைப்பு சார் உறவுக்கூடாகவே கொழும்பைத்தான் அணுகுகின்றன. கொழும்பை கையாள முடியாமல் போகும்போது தமிழ் மக்களை ஒரு கருவியாகக் கையாண்டு கொழும்பை வழிக்குக் கொண்டு வருகின்றன.
இதில் தமிழ் மக்கள் தொடர்ச்சியாக வெளித்தரப்புகளின் கருவிகளாக கையாளப்பட்டு வருகிறார்கள். இதை இன்னும் கூர்மையாகச் சொன்னால் இலங்கை தீவுக்குள் தலையிட விரும்பும் எல்லாத் தரப்புக்களும் தமிழ்மக்களின் பிரச்சினையை பயன்படுத்தித்தான் உள்நுழைகின்றன.
அப்படித்தான் இந்தியா 1983யூலையில் உள்நுழைந்தது. அப்பொழுது கெடுபிடிப் போர்க்காலம். இந்தியா ரஷ்யப் பேரரசுடன் நின்றது. ஜெயவர்த்தன அமெரிக்காவோடு நின்றார்.எனவே அமெரிக்காவின் வியூகத்தை உடைப்பதற்கு இந்தியா இனப்பிரச்சினையை கையில் எடுத்தது. தமிழ் இயக்கங்களுக்கு பயிற்சியும் பின்தள வசதிகளும் கொடுத்தது.
அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான நிழல் போரை,தமிழ் மக்களும் சிங்கள மக்களும் நிஜப்போராக முன்னெடுத்தார்கள். இதன்மூலம் ஒரு கட்டத்தில் இலங்கை அரசாங்கத்தை வழிக்குக் கொண்டுவந்த இந்தியா, இந்திய-இலங்கை உடன்படிக்கையை எழுதிக் கொண்டது. இது முதலாவது அத்தியாயம்.
அடுத்த அத்தியாயம்,மேற்கின் சமாதான முயற்சிகள். தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டம் காரணமாக இலங்கைத்தீவின் அரசியல் சமநிலை மாற்றம் கண்டது. அக்காலகட்டத்தில் சீனா ஒரு பிராந்திய பேரரசாக எழுச்சி பெற்றதோடு ஒரு பூகோள பேரரசாக மேலெழும் கனவுகளோடு முன்னேறத் தொடங்கியிருந்தது.
சீனாவை எதிர் கொள்ளவும் உலகளாவிய ரீதியில் தனக்கு ஒரு பாதுகாப்பு வலைப்பின்னலை உருவாக்கிக் கொள்ளவும் அமெரிக்கா தலைமையிலான மேற்கு நாடுகள் இனப்பிரச்சினையில் தலையிட்டன. அதன் விளைவே ரணில்- பிரபாகரன் உடன்படிக்கை. அது வெற்றியளிக்கவில்லை. அதன்பின் நடந்த நாலாம் கட்ட ஈழப்போரில் ஆயுதப்போராட்டம் தோற்கடிக்கப்பட்டது.
ஆயுதப் போராட்டம் தோற்கடிக்கப்பட்ட பின் ராஜபக்ச அரசாங்கம் அமெரிக்காவையும் இந்தியாவையும் நோக்கிப் போனதை விடவும் சீனாவை நோக்கியே அதிகமாக சென்றது. அவ்வாறு செல்வதற்கு காரணங்களும் உண்டு.
இந்தியாவில் தமிழகம் உண்டு. ஈழத் தமிழர்களுக்கு ஏதாவது நடந்தால் தமிழகம் கொதிக்கும். அது இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையின் மீது செல்வாக்குச் செலுத்தக்கூடிய ஒரு காரணியாக மாறமுடியும். ஆனால் சீனாவில் அவ்வாறான அம்சம் எதுவும் கிடையாது. இது முதலாவது காரணம்
மேற்குநாடுகளில் பலமான ஒரு தமிழ் புலம் பெயர்ந்த சமூகம் உண்டு.அதுவும் அந்தந்த நாடுகளின் ராஜ்ய முடிவுகளின் மீது செல்வாக்குச் செலுத்தக்கூடிய ஒரு வளர்ச்சிக்கு போகமுடியும். ஆனால் சீனாவில் அப்படிப்பட்ட அம்சம் எதுவும் கிடையாது. இது இரண்டாவது காரணம்.
மூன்றாவது காரணம், நிதி உதவி என்று வரும்பொழுது மேற்கத்திய நாடுகள் மனித உரிமைகள், பொறுப்புக்கூறல் போன்றவற்றை முன் நிபந்தனைகளாக வைக்கமுடியும். ஆனால் சீனா நிபந்தனையற்ற ஒரு கொடையாளி. எனவே இக்காரணமும் ராஜபக்சக்களை சீனாவை நோக்கித் தள்ளியது.
நாலாவது காரணம், இப்பிராந்தியத்தில் சீனாவின் “பட்டியும் பாதையும் “ வியூகத்தில் பங்காளிகளை இணைத்துக்கொள்ள சீனா முயற்சிக்கிறது. ஏற்கனவே இணைத்துக்கொண்ட மாலைதீவுகளை இந்தியாவும் அமெரிக்காவும் சேர்ந்து சீனாவிடமிருந்து கழட்ட முயற்சிக்கின்றன.
இந்நிலையில் இலங்கைத் தீவை தனது வியூகத்தின் பங்காளியாக மாற்றும் முயற்சியில் சீனா கணிசமான அளவுக்கு முன்னேறி இருக்கிறது.
இவை தவிர, மேலும் ஒரு காரணம் உண்டு.அது என்னவெனில் ராஜபக்சக்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பாரம்பரியத்தில் வந்தவர்கள். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியானது சீனாவோடு வரலாற்றுரீதியாக நட்புடைய ஒரு கட்சி. அரிசி இறப்பர் உடன்படிக்கையில் தொடங்கி அந்த உறவு நீடித்து வருகிறது. இதுவும் ராஜபக்சக்களை சீனாவை நோக்கி நகர்த்தியது.
இப்படிப்பட்டதோர் அரசியல் பின்னணியில் ராஜபக்சக்கள் சீனாவை நோக்கி அதிகமாக சென்றார்கள். இலங்கைத் தமிழ் அரசியல் யதார்த்தத்தின்படி அரசாங்கம் எந்தத் தரப்பை நோக்கி போகிறதோ அதற்கு எதிர்தரப்பை நோக்கிய தமிழ் மக்கள் போவார்கள். சீனாவின் விடயத்திலும் அதுதான் நடந்தது.
சீனாவை போலவே இந்தியாவும் யுத்தத்தில் அரசாங்கத்துக்கு உதவியது. ஆனால் அந்த உதவியை இந்திய நடுவண் அரசின் உதவியாகத்தான் தமிழ் மக்கள் பார்க்கிறார்கள். அதை தமிழகத்தில் உள்ள சாதாரண பொதுமக்களின் செயற்பாடாக ஈழத்தமிழர்கள் பார்க்கவில்லை. ஈழத்தமிழர்கள் தமிழகத்தை இப்பொழுதும் தம்மிலிருந்து பிரித்துப் பார்க்கவில்லை.
இதுதான் ஈழத்தமிழர்களை கையாள்வதில் இந்தியாவுக்குள்ள மிக வாய்ப்பான அம்சமும் ஆகும். தமிழகத்தை தாண்டி சீனாவை நோக்கிச் செல்ல ஈழத்தமிழர்கள் முயலவில்லை; ஈழத் தமிழர்களால் முடியவில்லை என்பதே உண்மை.
தமிழகத்தை தாண்டி ஈழத் தமிழர்களால் சீனாவை நோக்கி போக முடியவில்லை என்பது இந்திய நடுவண் அரசுக்கும் தெரியும், சீனாவுக்கும் தெரியும். அது காரணமாகவே தமிழகத்துக்கும் தமிழர்களுக்கும் இடையிலான இணைப்புகளை அறுக்கும் விதத்தில் மீனவர் விவகாரத்தைப் பெருப்பிக்கும் சக்திகள் தீவிரமாக உழைக்கின்றன.
இந்த வாரம் வடக்கிற்கு வருகை தந்த சீன தூதுவர் தலைமையிலான குழு மீனவர்களை தெரிந்தெடுத்து நிவாரணமும் மீன்பிடி வலைகளையும் வழங்கி இருக்கிறது. இந்த நிவாரணத்துக்கு பின்னால் அரசியல் இலக்குகள் உண்டு. தமிழகத்துக்கும் ஈழத்தமிழர்களுக்கும் இடையிலான இணைப்புக்களை அறுக்க முயலும் சக்திகளுக்கு இது உற்சாகமூட்டும்.
அது மட்டுமல்ல, சீனத் தூதுவர் பருத்தித்துறையில் தமது விஜயத்தை ரோன் கமராவின் மூலம் படம்பிடித்திருக்கிறார். அதேபோல தமிழ் மக்களால் சந்தேகத்தோடு பார்க்கப்படும் கிழக்கு அரியாலையில் உள்ள கடலட்டைப் பண்ணைக்கும் வருகை தந்துள்ளார்.
இந்திய எல்லை வரை கடலில் பயணம் செய்து இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலுள்ள திட்டிலும் இறங்கி நின்றிருக்கிறார். சீனத் தூதரகத்தின் விஜயம் முதலில் இரண்டு நாட்களுக்கு என்று கூறப்பட்டது. ஆனால் அது இரண்டு நாட்களுக்கும் மேலாக நீடித்தது.
எனவே மிக நீண்ட கடல் எல்லையைக் கொண்ட தமிழ் மக்களோடு தனது பிணைப்புகளை பலப்படுத்துவதற்கு சீனா முயற்சிப்பது தெரிகிறது. மிகக்குறிப்பாக தமிழக மீனவர்களுக்கும் ஈழத்தமிழ் மீனவர்களுக்கும் இடையே முரண்பாடுகள் அதிகரித்து வரும் ஒரு பின்னணியில் சீனா வடக்கை நோக்கி திரும்பியிருக்கிறதா?
-நிலாந்தன்-