லங்கா பிரீமியர் லீக் ரி-20 தொடரின் சம்பியன் கிண்ணத்துக்கான இறுதிப் போட்டி, இரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது.
இன்று (வியாழக்கிழமை) இரவு 7.30 மணிக்கு ஹம்பாந்தோட்டை மைதானத்தில் நடைபெறும் இறுதிப் போட்டியில், நடப்பு சம்பியன் ஜப்னா கிங்ஸ் அணியும் காலி க்ளேடியேட்டர்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
நடப்பு தொடரை பொறுத்தவரை ஜப்னா கிங்ஸ் அணி, காலி க்ளேடியேட்டர்ஸ் அணியை எதிர்கொண்ட இரண்டு லீக் போட்டிகள் மற்றும் வெளியேற்றுப் போட்டியில் தோல்வியை தழுவியது.
ஆகையால், திடமான நம்பிக்கையுடன் இன்றைய போட்டியில், ஜப்னா கிங்ஸ் அணியை காலி க்ளேடியேட்டர்ஸ் அணி எதிர்கொள்ளவுள்ளது.
அதேவேளை, ஜப்னா கிங்ஸ் அணி, கணிக்க முடியாத அணியாகும். அவிஷ்க பெனார்டோ, ரமனுல்லா குர்பாஸ், சொயிப் மாலிக், வஹாப் ரியாஸ், வனிந்து ஹசரங்க, திசர பெரேரா, ஆகியோர் இப்போட்டியில் சிறப்பாக பிரகாசிக்கும் பட்சத்தில் காலி க்ளேடியேட்டர்ஸ் அணிக்கு கடும் அழுத்தம் கொடுக்க முடியும்.
மறுமுனையில் காலி க்ளேடியேட்டர்ஸ் அணியை பொறுத்தவரை தனுஷ்க குணதிலக்க, குசல் மெண்டிஸ், பானுக ராஜபக்ஷ, சமித் பட்டேல், மொஹமட் ஹபீஸ், தனஞ்சய லக்ஷான், நுவான் துசார, பென் டன்ங் உள்ளிட்ட சிறந்த வீரர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த முறை நடைபெற்ற முதலாவது எல்.பி.எல். இறுதிப் போட்டியில், இவ்விரு அணிகளுமே மோதின. இதில் ஜப்னா கிங்ஸ் அணி, 53 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று சம்பியன் பட்டத்தை வென்றிருந்தமை நினைவுக்கூரத்தக்கது.
எதுஎவ்வாறாயினும் இப்போட்டி இரசிகர்களுக்கு உச்ச விறுவிறுப்பை பரிசளிக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.