கிறிஸ்துமஸ் தினமான இன்று, பிரித்தானியாவின் வின்ஸர் கோட்டை மைதானத்துள் நுழைந்த “தாக்குதல் ஆயுதம்” தாங்கிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
19 வயதுடைய சவுத்தம்ப்டனைச் (Southampton) சேர்ந்த இந்த நபர், GMT நேரப்படி காலை 8.30 மணிக்கு மைதானத்திற்குள் நுழைந்த சில நிமிடங்களில் கண்டுபிடிக்கப்பட்டதாக தேம்ஸ் பள்ளத்தாக்கு காவல்துறை (Thames Valley Police) தெரிவித்துள்ளது.
பாதுகாக்கப்பட்ட தளத்தை அத்துமீறியமை, தாக்குதல் ஆயுதத்துடன் அத்துமீறி நுழைந்தமை ஆகிய சந்தேகத்தின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
எனினும் அவர் எந்த கட்டிடங்களுக்குள்ளும் நுழையவில்லை என்றும் அரச குடும்ப உறுப்பினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் காவற்துறை தெரிவித்துள்ளது.
இது குறித்து கருத்து வெளியிட்ட தேம்ஸ் பள்ளத்தாக்கு காவற்துறை அத்தியட்சகர் ரெபேக்கா மியர்ஸ் (Rebecca Mears), இந்த சம்பவத்தை தொடர்ந்து விசாரணை நடந்து வருவதாகவும், பெருநகர காவல்துறையின் சக ஊழியர்களுடன் இணைந்து பணியாற்றி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை பொதுமக்களுக்கு ஏதாவது ஆபத்து இருப்பதாக தாம் நம்பவில்லை எனவும், மகா ராணி தனது சாண்ட்ரிங்ஹாம் தோட்டத்தில் (Sandringham estate) வழக்கம் போல் கிறிஸ்துமஸ் தினத்தை கழிப்பதை விட, விண்ட்சர் கோட்டையில் இருப்பதாகவும் காவற்துறை அத்தியட்சகர் ரெபேக்கா மியர்ஸ் (Rebecca Mears) தெரிவித்துள்ளார்.