சமகாலத்தில் இலங்கையில் அரசியல் முட்டி மோதல்களுக்கு அப்பால் பெரிதும் பேசப்படுகின்ற விடயம் பொருளாதார நெருக்கடிகளாகும்.
சமையல் எரிவாயு, சிலிண்டர்கள் வெடிகுண்டுகளாக ஒவ்வொரு வீடுகளிலும் மாறியுள்ளது. எரிபொருட்களின் விலை ஒரே இரவில் திடீரென அதிகரிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு உற்பத்திகளை அதிகரிப்பதையும், இயற்கை உரத்தினை பயன்படுத்துவதையும் அரசாங்கம் தேசிய கொள்கையாக கொண்டிருக்கின்றபோதும், அதனை நடைமுறைப்படுத்த முடியாத நிலையில் இருக்கின்றது.
சீனாவிடமிருந்து உரத்தினை பெற்றுக்கொள்வதற்கு முயன்று, இறுதியில் பிள்ளையார் பிடிக்கப்போய் குரங்கான கதையாக மாறியிருக்கின்றது. அதேநேரம், பொருட்களின் விலையேற்றம், மரக்கறிகளின் விலையேற்றம் என்று மக்கள் அன்றாட வாழ்வில் பெரும் நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்கின்றார்கள்.
இந்த நெருக்கடிகளை போக்கும் வல்லமை அரசாங்கத்திடம் இல்லலை. திறைசேரியில் இருப்பில்லை. நாட்டிற்கு உரிய வருமானம் இல்லை. குறிப்பாக சுற்றுலாத்துறை முழுமையாக முடங்கிக் கிடக்கின்றது. ஆடையேற்றுமதியும் சொல்லும்படியாக இல்லை.
இத்தகையதொரு நிலையில், இலங்கை அரசாங்கம் நெருக்கடிகளிலிருந்து மீள்வதற்காக சர்வதேச நாணய நிதியத்திடம் செல்லுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட எதிரணித் தலைவர்கள் சர்வதேச நாணய நிதியத்திடம் செல்வதன் மூலம் பொருளாதார நெருக்கடிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்று ஆலோசனை தெரிவிக்கின்றனர்.
இருந்தபோதும், ராஜபக்ஷக்கள் தலைமையிலான அரசாங்கம் அதற்கு தயாராக இல்லை. தாம் ஒருபோதும் சர்வதேச நாணய நிதியத்திடம் மண்டியிடப்போவதில்லை என்று இறுமாப்புடன் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றார்கள்.
இவ்விருக்கையில், இலங்கை எதிர்நோக்கி வரும் டொலர்கள் பற்றாக்குறைப் பிரச்சினைக்கு தீர்வு வழங்கும் நோக்கில் சீன அரசாங்கம் 1.5 பில்லியன் டொலர்களை வழங்கவுள்ளதாக ஆளும் கட்சியின் முக்கிய அமைச்சர் விமல் வீரவன்ச அறிவித்துள்ளார்.
கடன் செலுத்துகைக்காக சீனா இவ்வாறு கடனுதவி வழங்குவதாகவும், அவ்வாறு கிடைக்கப்பெற்றால் தற்போதைய நெருக்கடி நிலைக்கு தீர்வு கிடைக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே சீனா இலங்கை அரசாங்கத்திற்கு பல்வேறு வடிவங்களில் நிதியை வழங்கி வருகின்றது. இலங்கை இந்து சமுத்திரத்தின் கேந்திர முக்கியமான மூலோபாயப் புள்ளியில் இருப்பதன் காரணமாகவே இலங்கையை தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொள்வதற்கு சீனா முயல்கிறது.
இதற்காக இலங்கையை சீன ‘கடன்பொறிக்குள்’ சிக்க வைப்பதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. ஆனால் இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தினர் சீனாவின் கடன் பொறிக்குள் தாம் சிக்கவில்லை என்று கூறுகின்றார்கள்.
அதேநேரம், கொழும்பில் உள்ள சீன தூதரகமும் பல்வேறு சந்தர்ப்பங்களில், மேற்குலகத்தின் மிகைப்படுத்தப்பட்டதொரு பிரசாரமாகவே ‘கடன்பொறி’ விடயம் என்று சுட்டிக்காட்டி வருகின்றது.
ஆனால், யதார்த்தத்தில் நிலைமைகள் மாறுபட்டே காணப்படுகின்றன. இலங்கை மத்திய வங்கியின் வெளிநாட்டு சொத்துக்கள் திணைக்களத்தினால் வெளியிடப்படும் வெளிநாட்டு கடன் தொடர்பிலான சாராம்ச அறிக்கையின் பிரகாரம், 2021ஆம் ஆண்டு ஏப்ரல் மாத இறுதியில் இலங்கையின் முழு கடன் நிலுவை தொகையாக 35.1 பில்லியன் டொலர்களாகக் காணப்படுகின்றது.
2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 30ஆம் திகதி வரை 981.0 மில்லியன் டொலர்கள் கடன் செலுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு செலுத்தப்பட்ட கடனில் 520.6 மில்லியன், டொலர்கள் அடிப்படை கடனை மீள செலுத்துவதற்காகவும், எஞ்சிய 460.4 மில்லியன் டொலர்கள் வட்டியை செலுத்துவதற்காகவும் பயன்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், 2021ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், இலங்கைக்கு பிரதான கடன் வழங்குநர்களாக வர்த்தக கடன் அல்லது சர்வதேச சாவரின் பத்திரங்கள் 47சதவீதமாகவும், ஆசிய அபிவிருத்தி வங்கி 13 சதவீதமாகவும், சீனா 10 சதவீதமாகவும், ஜப்பான் 10 சதவீதமாகவும், உலக வங்கி 9 சதவீதமாகவும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான நிலையில் மீண்டும் சீனாவிடத்தில் இலங்கையானது கடனையோ அல்லது நன்கொடையையோ பெறுவதானது இலங்கையை மேலும் மேலும் சீனாவின் பிடிக்குள்ளேயே தள்ளப்போகின்றது. அதனை நேரடியாகக் கூறுவதானால் இலங்கை சீனாவின் ‘கடன்பொறிக்குள்’ சிக்கப்போகின்றது.
-பெனிற்லஸ்-