விசாகப்பட்டினம் அருகே வசவானிப்பாலம் மற்றும் ஜலரிபேட்டை பகுதிகளில் 144 தடை விதிக்கப்பட்டுள்ளது.
இன்று (புதன்கிழமை) அதிகாலை கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது இருதரப்பு மீனவர்களுக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதன்போது ஆத்திரமடைந்த ஒரு தரப்பினர், மற்றொரு தரப்பினர் பயன்படுத்திய 4 மீன்பிடி படகுகளுக்கு தீ வைத்தனர். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற மோதலில் 7 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
குறித்த சம்பவத்தை அறிந்த கடலோர காவல்படையினர், ஹெலிகாப்டர்களை அனுப்பி தீ வைக்கப்பட்ட படகுகளில் இருந்த மீனவர்களை காப்பாற்றினர்.
மேலும் அப்பகுதியில் எப்போது வேண்டுமானாலும் மோதல் ஏற்படலாம் என்ற பதற்றம் நிலவுவதால், வசவானிப்பாலம் மற்றும் ஜலரிபேட்டை ஆகிய பகுதிகளில் 144 தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆந்திரா மாநிலம்- விசாகப்பட்டினம் கடற்பகுதியில், மீன் பிடிப்பதற்காக பயன்படுத்தப்படும் வலைகள் தொடர்பாக மீனவர்களுக்கு இடையே கடந்த சில மாதங்களாக பிரச்சினை நிலவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.