ஈஸ்டர் தாக்குதல் அடிப்படைவாதிகளின் செயற்பாடு என ஏற்கனவே அறிந்திருந்தும் அதற்கு இடமளித்த சில தலைவர்கள், தாக்குதலை தமது அரசியல் இலாபங்களுக்காக பயன்படுத்திக்கொண்டனர் என கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் (வெள்ளிக்கிழமை) ஆயிரம் நாட்கள் பூர்த்தியாகியுள்ளன.
இதனை முன்னிட்டு விசேட ஆராதனைகள் இன்றைய தினம் இடம்பெற்றன.
இதற்கமைய ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து இன்றைய தினம் ராகம பெசிலிக்கா பேராலயத்தில் கூட்டுத்திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.
இந்த ஆராதனைகளில் நாட்டின் அனைத்து மறைமாவட்டங்களையும் சேர்ந்த ஆயர்கள் பங்கேற்றிருந்தனர்.
இந்தநிலையில் குறித்த ஆராதனையில் பங்கேற்று உரையாற்றிய போதே கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை மேற்கண்டவாறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தார்.
இதன்போது அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், “கடவுள் உண்மையை வெளிப்படுத்துவதை யாராலும் தடுக்க முடியாது.
தாக்குதலுக்குப் பிறகு அமைதியின்மையை ஏற்படுத்த சில சக்திகள் திட்டமிட்டிருந்தமை விசாரணையில் தெரியவந்துள்ளது. இது ஜனாதிபதித் தேர்தலை மனதில் வைத்து நடத்தப்பட்டது. RAW வழங்கிய தகவலைப் புறக்கணித்துள்ளனர். சில அதிகாரிகள் ஈஸ்டர் தாக்குதல்களைத் தடுக்க நடவடிக்கை எடுக்க முயன்றனர், ஆனால் மற்றவர்களால் அவர்கள் தடுக்கப்பட்டனர்.
நாட்டில் பல வருடங்களாக பல்வேறு சம்பவங்கள் நடந்தன. துப்பாக்கிச்சூடு, மக்கள் எரியும் டயர்களில் தள்ளப்பட்டனர். இவர்களுக்குப் பின்னால் இருந்த ஆட்சியாளர்கள் ஒவ்வொரு நாளும் பொறுத்துக் கொள்வார்கள் என்று நினைக்கிறார்களா என்பது ஆச்சரியமாக இருக்கிறது.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.