போதியளவு எரிபொருள் கிடைக்காவிட்டால் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதல் மீண்டும் மின்சாரத்தை துண்டிக்க நேரிடும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
எரிபொருள் கையிருப்பு குறைவடைந்ததன் காரணமாக சபுகஸ்கந்த மின் உற்பத்தி நிலையம் ஒரு வாரத்தில் இரண்டாவது முறையாக இன்று(சனிக்கிழமை) மீண்டும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், மின்சார பாவனையை குறைப்பதற்கான யோசனையொன்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காமினி லொகே தெரிவித்துள்ளார்.
சப்புகஸ்கந்த மின் உற்பத்தி நிலையம் கடந்த 17ஆம் திகதி எரிபொருள் கையிருப்பு குறைவடைந்ததன் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் 900 மெற்றிக் தொன் எரிபொருள் அனல்மின் நிலையத்திற்கு வழங்கப்பட்டதுடன், அன்று பிற்பகலில் மீண்டும் மின் உற்பத்தியை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
எவ்வாறாயினும், அந்த எரிபொருள் கையிருப்பு நிறைவடைந்ததன் காரணமாக இன்று பிற்பகல் முதல் சபுகஸ்கந்த மின் உற்பத்தி நிலையம் முற்றாக நிறுத்தப்பட்டுள்ளது.
எனினும், இலங்கை மின்சார சபையின் முன்னைய அறிவிப்பின் பிரகாரம் சபுகஸ்கந்த அனல்மின் நிலையத்திற்கு பெப்ரவரி மாதம் முதல் எரிபொருளை வழங்க முடியும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் நேற்று தெரிவித்திருந்தார்.
இதேவேளை அனல் மின் நிலையங்களில் எரிபொருள் தீர்ந்துள்ளதால் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதல் மின் தடைக்கு செல்லவேண்டியுள்ளதாக இலங்கை மின்சார சபையின் பதில் பொது முகாமையாளர் கலாநிதி சுசந்த பெரேரா தெரிவித்துள்ளார்.
இது குறித்த காலம், நேரம் எதிர்வரும் திங்கட்கிழமை அல்லது அதற்கு முன்னதாக அறிவிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், இன்று, நாளை மற்றும் நாளை மறுதினம் ஆகிய நாட்களில் மின்வெட்டு அமுல்படுத்தப்படாது என மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தற்போதைய சூழ்நிலை காரணமாக சந்தையில் மெழுகுவர்த்திகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமைக் குறிப்பிடத்தக்கது.