நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ஒமிக்ரோன் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சின் வைத்திய தொழில்நுட்ப பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் அன்வர் ஹம்தானி தெரிவித்துள்ளார்.
அத்துடன், வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை சுமார் 10 வீதத்தால் அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, நாட்டில் நேற்றைய தினம் புதிதாக 838 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தொற்றுநோய் பிரிவு தெரிவித்துள்ளது.
நேற்று 838 புதிய நோய்த்தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில், நாட்டில் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 6 இலட்சத்து ஆயிரத்து 886 ஆக அதிகரித்துள்ளார்.
இதற்கமைய நாட்டில் 10 ஆயிரத்து 473 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், 15 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளனர்.
இதன்காரணமாக நாட்டில் இதுவரை பதிவாகியுள்ள மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்து 299 ஆக உயர்வடைந்துள்ளது.
இதேவேளை, நாளாந்தம் ஒக்சிஜனை நம்பியிருக்கும் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை சுமார் 8 வீதத்தால் அதிகரித்துள்ளது.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே சுகாதார அமைச்சின் வைத்திய தொழில்நுட்ப பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் அன்வர் ஹம்தானி இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.
அத்துடன், சிக்கல்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை 12 வீதத்தால் அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, நாடு முழுவதும் கொரோனா மீண்டும் வேகமாக பரவி வருவதாக அகில இலங்கை தாதியர் சங்கம் தெரிவித்துள்ளது.
கடந்த ஒரு வாரத்திற்குள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மாத்திரம் கர்ப்பிணிப் பெண்கள் உட்பட 62 தாதியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக அந்த சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், ஏனைய மருத்துவமனைகளில் பணியாற்றும் பெரும்பாலான ஊழியர்களுக்கும் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.