கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் குழந்தைகளின் விகிதம் கடுமையாக உயர்ந்துள்ளதாக சுகாதார அமைச்சு இன்று (திங்கட்கிழமை) தெரிவித்துள்ளது.
அனைத்து வயதினரிடையேயும் கொரோனா தொற்று விகிதம் வேகமாக அதிகரித்து வருவதாக சுகாதார சேவைகளின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஜி.விஜேசூரிய ஊடகமொன்றுக்கு தெரிவித்தார்.
பெற்றோர்கள் மற்றும் பெரியவர்களிடம் இருந்து குழந்தைகளுக்கு வைரஸ் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதை சுட்டிக்காட்டிய அவர், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடம் எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக்கொண்டார்.
தற்போது கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் கணிசமான எண்ணிக்கையில் உள்நாட்டிலேயே சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.
குழந்தைகளுக்கான லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலையில் (LRH) தீவிர சிகிச்சைப் பிரிவில் 50க்கும் மேற்பட்ட குழந்தைகள் சிகிச்சையைப் பெறுகின்றனர் என்றும் அதேநேரத்தில் சுமார் 10 முதல் 15 கொரோனா தொற்றுக்குள்ளான சிறுவர்கள் தினசரி சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுகின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் பெப்ரவரி நடுப்பகுதியில் நிலைமை மேலும் மோசமடையக்கூடும் என்று சுட்டிக்காட்டிய அவர், 12 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கொரோனா தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளுமாறும் 20 வயதுக்கு மேற்பட்டவர்கள் முடிந்தவரை விரைவாக பூஸ்டர் டோஸ்களைப் பெறுமாறும் அவர் அறிவுறுத்தினார்.