பிரேஸிலின் சாவ் பாலோ மாநிலத்தில் நிலச்சரிவு மற்றும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் வெள்ளிக்கிழமை முதல் 7 குழந்தைகள் உட்பட குறைந்தது 19பேர் உயிரிழந்துள்ளதாக பொது பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சாவோ பாலோ மாநில அதிகாரிகளின் கூற்றுப்படி, மழையில் மேலும் ஒன்பது பேர் காயமடைந்தனர் மற்றும் நான்கு பேர் காணவில்லை. அதே நேரத்தில் மாநிலம் முழுவதும் சுமார் 500 குடும்பங்கள் வீடற்ற நிலையில் உள்ளனர்.
சாவ் பாலோ ஆளுனர் ஜோவோ டோரியா, நேற்று (ஞாயிற்றுக்கிழமை) வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு சென்று, பாதிக்கப்பட்ட நகரங்களுக்கு 15 மில்லியன் ரியாஸ் ( 2.79 மில்லியன் அமெரிக்க டொலர்கள்) அவசர உதவியை வழங்க அனுமதித்துள்ளதாக கூறினார்.
இது குறித்து மத்திய அரசாங்கம் தொடர்ந்து கண்காணித்து வருவதாக மண்டல மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரிய சாவோ பாலோவைச் சுற்றியுள்ள மிகக் கடுமையான பாதிப்புக்குள்ளான நகராட்சிகளில் அருஜா, பிரான்சிஸ்கோ மொராடோ, எம்பு தாஸ் ஆர்ட்ஸ் மற்றும் ஃபிராங்கோ டா ரோச்சா ஆகியவை அடங்கும்.
புயல்கள், வர்சியா பாலிஸ்டா, காம்போ லிம்போ பாலிஸ்டா, ஜாவ், கேபிவாரி, மான்டெமோர் மற்றும் ரஃபர்ட் ஆகிய இடங்களிலும் சேதங்களை ஏற்படுத்தியதாக மாநில அதிகாரிகள் தெரிவித்தனர்.
டிசம்பரில் இருந்து, கனமழையால் வடகிழக்கு பிரேஸிலில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது, மத்திய மேற்குப் பகுதியில் அறுவடைகளை தாமதப்படுத்தும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியது மற்றும் மினாஸ் ஜெரெய்ஸ் மாநிலத்தில் சுரங்க நடவடிக்கைகளை சிறிது நேரம் நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.