ஆஸ்திரியாவில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொவிட் தடுப்பூசியை கட்டாயமாக்கும் புதிய சட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) அமுலுக்கு வருகின்றது.
பல நாடுகள் முதியோர்கள் அல்லது மருத்துவ ஊழியர்களுக்கான ஆணைகளை அறிமுகப்படுத்தியுள்ள நிலையில், ஐரோப்பாவில் இத்தகைய விரிவான நடவடிக்கைகளை மேற்கொண்ட முதல் நாடு என்ற பெருமையை ஆஸ்திரியா பெற்றுள்ளது.
தடுப்பூசிகள் கடுமையான நோயை எதிர்த்துப் போராடுவதில் பயனுள்ளதாக இருக்கும் என்றும், எதிர்கால முடக்கநிலைகளைத் தடுக்க சட்டம் தேவை என்றும் ஆஸ்திரியாவின் அரசாங்கம் கூறுகிறது.
ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அரசியலமைப்புக்கான அமைச்சர் கரோலின் எட்ஸ்டாட்லர் இதுகுறித்து கூறுகையில்,
‘இது உண்மையில் ஒரு வலுவான நடவடிக்கை மற்றும் மிகவும் கடினமான நடவடிக்கை என்பதை அரசாங்கம் மிகவும் அறிந்திருக்கிறது. ஆனால், அது அவசியம்
அரசியல்வாதிகளாகிய நாங்கள், சுகாதார அமைப்பு இன்னும் செயற்படுவதை உறுதிசெய்ய வேண்டிய பொறுப்பு உள்ளது, ஒட்டுமொத்த சமூகமும் சாதாரணமாக வாழ முடியும்.
இருப்பினும், கட்டாய தடுப்பூசி என்பது மனித உரிமைகளில் குறுக்கீடு. ஆனால் இந்த விடயத்தில், இந்த குறுக்கீடு நியாயப்படுத்தப்படலாம். தொற்றுநோயிலிருந்து வெளியேற வேண்டிய அவசியம் எங்களுக்கு உள்ளது, அதிலிருந்து வெளியேறி இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவதற்கு தடுப்பூசி மட்டுமே ஒரே வழி என்பதை நாங்கள் அறிவோம்’ என கூறினார்.
தடுப்பூசி, தனிப்பட்ட விருப்பமாக இருக்க வேண்டும் என சிலர் கூறுகின்றனர். சுமார் 72 சதவீத ஆஸ்திரியர்கள் முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளனர்.
தடுப்பூசி ஆணை, ஜனவரி 2024ஆம் ஆண்டு காலாவதியாகிவிடும். தொற்றுநோய் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டால் முன்னதாகவே இத்திட்டம் நிறைவுக்கு வந்துவிடலாம்.
சட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் நடைமுறைக்கு வருகிறது. ஆனால் அதிகாரிகள் மார்ச் நடுப்பகுதி வரை மக்களின் தடுப்பூசி நிலையை சரிபார்க்கத் தொடங்க மாட்டார்கள்.
தடுப்பூசி செலுத்த மறுப்பவர்களுக்கு 600 யூரோக்கள் முதல் 3,600 யூரோக்கள் வரை அபராதம் விதிக்கப்படும். மருத்துவ காரணங்களுக்காக தடுப்பூசி போட முடியாதவர்களுக்கு அல்லது கர்ப்பமாக இருப்பவர்களுக்கு விதிவிலக்குகள் பொருந்தும்.