எதிர்வரும் 4ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ள குளிர்கால ஒலிம்பிக்கை நடத்துவதற்கு சீனா தயாராகி வரும் நிலையில், கொரோனாவின் டெல்டா மாறுபாடு, சீனாவின் சியான் நகரம் உட்பட பல நகரங்களை அச்சுறுத்தி வருகின்றது.
குறித்த பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக இரண்டு வாரங்களுக்கு கடுமையான விதிகளுடன் கூடிய முழுமையான முடக்கல் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
திடீர் கட்டுப்பாடுகள் மற்றும் திட்டமிடப்படாத முடக்கல்கள் காரணமாக அந்நாட்டில் 13 மில்லியன் குடியிருப்பாளர்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் தங்களின் உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களைப் பெற்றுக்கொள்வதற்காக பல்வேறு வீட்டுப் பொருட்களை விற்பனை செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.
ஏனெனில் சீன அரசாங்கத்தின் ‘பூச்சி நிலை’ கொரோனா கொள்கையானது குடியிருப்பாளர்களை வீட்டுக்குள்ளேயே கடுமையாகக் கட்டுப்படுத்துவதாக உள்ளது.
அத்துடன் அவர்கள் உற்பத்திசெய்யும் பொருட்கள் அனைத்தும் சந்தைகளுக்குச் செல்வதற்கும் தடைகள் ஏற்பட்டுள்ளது.
பல குடியிருப்பாளர்கள் சீன சமூக ஊடக வலைத்தளங்களில் ஒரு பை அரிசி மற்றும் ரொட்டிக்கு தொலைபேசி போன்ற மின்னணு பொருட்களை விற்பனை செய்வதாக பகிர்ந்துள்ளனர்.
கடந்த டிசம்பர் 23 முதல் சியான் நகரம் கடுமையான முடக்கலில் இருப்பதால், அதன் குடியிருப்பாளர்களுக்கு உணவு மற்றும் அத்தியாவசியங்களை வழங்குவதற்கான போதுமான வழிமுறைகள் இல்லாததால் நிலைமைகள் தொடர்ச்சியாக மோசமடைந்து வருகிறது.
இதனால் குடிமக்கள் தங்கள் கட்டடங்களுக்குள் அத்தியாவசிய பொருட்களை பண்டமாற்று முறை மூலம் பெற்றுக்கொள்வதற்கு முயற்சிகளை எடுத்து வருகின்றார்கள்.
குடிமக்களுக்கு இலவச உணவு வழங்குவதற்கு அதிகாரிகள் தகவல்களைத் திரட்டினாலும், அவர்கள் பெற்றுக்கொள்ளும் தகவல்களுக்கு அமைவாக பொருட்களை வழங்க முடியவில்லை.
ஏனெனில் அனைத்துக் குடியிருப்பாளர்களுக்கும் பொருட்களை விநியோகம் செய்வதற்கு பொருட்கள் பற்றாக்குறை வெகுவாகக் காணப்படுகின்றது.
இதனால், தமது உணவுகளுக்காக சிகரட் உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்வதில் மக்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளமை நகரத்தின் கமராக்களில் பதிவாகியுள்ளதாக காணொளிகள் வெளியாகியும் உள்ளன.
ஆரம்பத்தில் முடக்கலுக்கு உட்பட நகரங்களில் உள்ள குடியிருப்பாளர்கள் ஒருவீட்டுக்கு ஒருவர் இரண்டுநாட்களுக்கு ஒரு தடவை வீட்டிலிருந்து வெளியேறுவதற்கு அனுமதிக்கப்பட்டார்கள். எனினும் இது நாளைடைவில் குறைவடைந்தது.
பூச்சியமான கொரோனா நிலைமையை ஏற்படுத்துதல் என்ற பெயரல் வீடுகளுக்கு பொருட்களை விநியோகிப்பதற்கு மட்டுமே தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும் சிறப்பு அனுமதி உள்ளவர்களுக்கு மட்டுமே வீதிகளில் இயங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இவ்விதமான நிலைமையால் உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களுக்காக அத்தியாவசியமற்ற பொருட்களைப் பரிமாறிக்கொள்ளும் பண்டமாற்று முறையை சமூக ஊடகங்களில் வர்த்தகக் குழுக்கள் மற்றும் வலையமைப்புக்கள் உருவாக்கப்படுகின்றன. அதனை மக்களும் அதிகளவில் நாடி வருகின்றார்கள்.
வெய்போ நகரில் உள்ள ஒரு குடியிருப்பாளர் பருத்தி துணிக்கு உருளைக்கிழங்கை பெறும் வகையில் வர்த்தகம் செய்வதாக அறிவித்தார். இதனால் பல குடியிருப்பாளர்கள் மகிழ்ச்சியடையவில்லை, அந்த அறிவிப்புக்கு எதிராக கருத்துக்களை வெளியிட்டனர்.
இதனைவிடவும் உணவு வாங்க வெளியே வந்ததற்காக ஒரு நபரைத் காவலர் ஒருவர் தாக்கும் காணொளி வெளியானது. இதனால் மக்கள் பதற்றமடைந்து விமர்சித்தனர். பின்னர் குறித்த காவலர் பகிரங்க மன்னிப்புக் கோரியிருந்தார்.
அதனைவிட, சீனாவில் 50சதவீதமான தொற்றாளர்கள் பதிவாகியுள்ள யான்டா மாவட்டத்தில் சீன கம்னியூசக் கட்சியானது அதன் இரண்டு உயர்மட்ட தலைவர்களை பதவி நீக்கம் செய்துள்ளது, அதற்கு பதிலாக துணை மேயர் ஒருவர் விடயங்களைப் பொறுப்பேற்றுள்ளார்.
சீனாவில் 2020ஆம் ஆண்டில் வுஹான் நகரில் 11 மில்லியன் மக்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். அதன் பின்னர் ஜியானில் முடக்கல் நிலைமை மிகவும் கடுமையாக பின்பற்றப்பட்டது.
இருப்பினும், சீனாவில் முடக்கல் குறித்து கடுமையான நடவடிக்கைகள் ஒரு வாரத்திற்கும் மேலாக முன்னெடுக்கப்படுகின்றது. எனினும் சீனாவில் தற்போது நாளொன்றுக்கு 122 தொற்றாளர்கள் அடையாளப்படுத்தப்படுகின்றார்கள். ஆனால் அந்த எண்ணிக்கை உண்மையானதா என்பது பற்றி உறுதிப்படுத்துவதில் சிக்கல்கள் நீடிக்கின்றன.
சீனக் கம்யூனிச கட்சிக்குள் அதிகாரத்தை மையப்படுத்துவது பிரதான விடயமாக இருக்கின்ற நிலையில் தொற்றுநோயிலிருந்து அடிமட்ட மக்கள் பாதிக்கப்படுவதை கட்டுப்படுத்துவது மிகவும் நெருக்கடியானதொரு விடயமாக காணப்படுகின்றது.
இவ்வாறிருக்க, கொரோனா தொற்று சீனாவில் உருவாகியதா என்பதை ஆராய்வதற்கான உலக சுகாதார நிறுவனத்தின் முயற்சிகள் தொடர்ந்தும் சீனாவினால் தடுக்கப்பட்டு வருகின்றது.
வுஹானில் உள்ள உணவுச் சந்தைக்குச் செல்ல உலக சுகாதார நிறுவன ஊழியர்கள் அனுமதிக்கப்படாத நிலையில், 2020 பிப்ரவரியில் உலக சுகாதார நிறுவனத்தின் ஆரம்ப விசாரணைகள் தொடங்கப்பட்டன. ஆனால் தற்போது வரையில் எவ்விதமான முடிவும் கிடைக்கவில்லை.
சீனா போன்று இந்தியா போன்ற பல நாடுகள் கடுமையான முடக்கல்களை நாடவில்லை. அவை, பொருளாதார நிலைமையைக் கருத்திற் கொள்ள வேண்டும் என்பதால் மெதுவாக செயற்பட்டன.
இந்நிலையில், தற்போது சீனா முன்னெடுத்துள்ள கடுமையான முடக்கல் நிலைமைகள் குறித்து உலக நாடுகள் பலவும் கேள்விகளை எழுப்பியுள்ளன.
எவ்விதமான விமர்சனங்கள் தன்னைச் சுற்றி எழுந்தாலும் சீனா அரசாங்கம் அதன் பூச்சிய கொரோனா கொள்கையில் உறுதியாக இருக்கிறது.
இது மனித நடமாட்டத்திற்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க அதிகாரிகளைத் தூண்டுகிறது.