19வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கிண்ணத் தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில், இந்தியக் கிரிக்கெட் அணி 96 ஓட்டங்களால் அபார வெற்றிபெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் இந்தியக் கிரிக்கெட் அணி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.
ஆன்டிகுவா மைதானத்தில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற இரண்டாவது அரையிறுதிப் போட்டியில், இந்தியக் கிரிக்கெட் அணியும் அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணியும் பலப்பரீட்சை நடத்தின.
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்தியக் கிரிக்கெட் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியக் கிரிக்கெட் அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 290 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, யாஷ் துல் 110 ஓட்டங்களையும் செய்க் ராஷிட் 94 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், ஜெக் நிஸ்பெட் மற்றும் வில்லியம் சல்ஸ்மென் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து 291 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணி, 41.5 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 194 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதனால் இந்தியக் கிரிக்கெட் அணி 96 ஓட்டங்களால் அபார வெற்றிபெற்றது.
இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, லச்லன் ஷா 51 ஓட்டங்களையும் குரே மில்லர் 38 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக, ஒரு சிக்ஸர் 10 பவுண்ரிகள் அடங்களாக 110 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட யாஷ் துல் தெரிவுசெய்யப்பட்டார்.
இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ள இந்தியக் கிரிக்கெட் அணி, நாளை மறுதினம் நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் இங்கிலாந்துக் கிரிக்கெட் அணியை எதிர்கொள்ளவுள்ளது.