அண்மையில் எரிமலை சீற்றத்தால் பாதிப்புக்குள்ளான தென்பசிபிக் கடலில் அமைந்திருக்கும் சிறிய தீவு நாடான டோங்காவில், ஐந்து பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டதைத் தொடர்ந்து அங்கு முதல்முறையாக முடக்கநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகளில் கொரோனா பரவ தொடங்கியதுமே டோங்கா வெளிநாடுகளுடனான எல்லைகள் அனைத்தையும் மூடியது.
இதன் மூலம் நாட்டுக்குள் கொரோனா வைரசை நுழைய விடமால் டோங்கா அரசு வெற்றிகரமாக தடுத்தது. எனினும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நியூசிலாந்தில் இருந்து திரும்பிய ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இருந்தபோதிலும் அவர் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டு கடுமையான தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதால் வைரஸ் மேற்கொண்டு பரவாமல் தடுக்கப்பட்டது.
இதனால் அங்கு ஊரடங்கை அமல்படுத்த வேண்டிய அவசியமும் வரவில்லை. கடந்த திங்கட்கிழமை வரை டோங்காவில் ஒரு கொரோனா நோயாளி கூட இல்லை என்ற நிலையே இருந்தது.
ஆனால், நேற்று முன்தினம் டோங்காவில் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தலைநகர் நுகு அலோபாவில் உள்ள துறைமுகத்தில் பணியாற்றி வரும் ஊழியர்கள் 2 பேர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகினர்.
அதை தொடர்ந்து ஊழியர்களின் குடும்பத்தினர் 3 பேருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதன் காரணமாக அந்த நாட்டில் முதல் முறையாக முடக்கநிலை அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலைமை ஒவ்வொரு 48 மணி நேரத்துக்கு பிறகும் நிலைமை மதிப்பாய்வு செய்யப்படும் எனவும் அந்த நாட்டின் பிரதமர் சியோசி சொவலேனி கூறினார்.
அண்மையில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பு மற்றும் சுனாமியால் அந்நாடு பாதிக்கப்பட்டிருந்த போது, உணவு மற்றும் மருந்து உள்ளிட்ட நிவாரண பொருட்களை நியூஸிலாந்து மற்றும் அவுஸ்ரேலியா ஆகிய நாடுகள் வழங்கின்.
இப்படி அண்டை நாடுகளில் வந்த நிவாரண பொருட்களை கையாண்ட துறைமுக ஊழியர்கள் இருவருக்குதான் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
இருப்பினும் வெளிநாட்டு கப்பல்களில் வந்த நிவாரண பொருட்கள் அல்லது ஊழியர்கள் மூலம் கொரோனா பரவியது என்பது உறுதி செய்யப்படவில்லை.
1 லட்சம் மக்கள் தொகை கொண்ட டோங்காவில் கடந்த மாதம் 14ஆம் திகதி ஒரு தீவுக்கு அருகே கடல் பகுதியில் உள்ள எரிமலை திடீரென வெடித்துச் சிதறியது. இதனால், அங்கு சுனாமி அலை உருவானது. இதில் 3 பேர் உயிரிழந்தனர்.