வெளியேற்றப்பட்ட மியன்மார் தலைவர் ஆங் சான் சூகிக்கு எதிராக 11ஆவது ஊழல் குற்றச்சாட்டை மியன்மார் பொலிஸ்துறை பதிவு செய்துள்ளது.
ஆங் சான் சூகியின் தாயாரின் பெயரிடப்பட்ட அறக்கட்டளைக்கு 550,000 அமெரிக்க டொலர்கள் நன்கொடையாகப் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் பொலிஸார் மேலும் ஒரு ஊழல் குற்றச்சாட்டைப் பதிவு செய்துள்ளதாக இராணுவத் தகவல் குழு ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
நீதிமன்ற நடவடிக்கைகள் எப்போது தொடங்கும் என்பது குறித்த எந்த விபரமும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்படவில்லை.
இராணுவத்திற்கு எதிரான தூண்டுதல், கோவிட்-19 விதிகளை மீறியமை மற்றும் தொலைத்தொடர்புச் சட்டத்தை மீறியதற்காக அவருக்கு ஏற்கனவே ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அவர் மற்ற குற்றச்சாட்டுகளை எதிர்த்துப் போராடும் போது வீட்டுக் காவலில் இருப்பார்.
ஒவ்வொரு ஊழல் குற்றச்சாட்டுக்கும் 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என்று மியன்மார் ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஆனால், ஆங் சான் சூகியின் ஆதரவாளர்களும் மனித உரிமைக் குழுக்களும், அவர் மீதான வழக்குகள் ஆதாரமற்றவை என்று கூறுகின்றனர்.
மேலும், ஆங் சான் சூகி அரசியலுக்குத் திரும்புவதைத் தடுக்கவும், 2023ஆம் ஆண்டுக்குள் இராணுவம் உறுதியளித்த புதிய தேர்தலில் போட்டியிடுவதை தடுக்கவும் திட்டமிடப்பட்டதாக கூறுகின்றனர்.
இதனிடையேஇராணுவம் வடமேற்கு சேகாயின் பகுதியில் பொதுமக்கள் மீது புதிய தாக்குதல்களை நடத்தியதாகக் கூறப்படுகிறது,
துருப்புக்கள் 400 வீடுகள் வரை எரித்ததாகக் கூறப்படுகிறது, ஆயிரக்கணக்கான குடியிருப்பாளர்கள் வெளியேற கட்டாயப்படுத்தினர்.
11 மாதங்களுக்கு முன்பு ஆட்சிக் கவிழ்ப்பில் இராணுவத்தால் வெளியேற்றப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள, மியன்மாரின் அரச ஆலோசகராகவும், நாட்டின் உண்மையான தலைவராகவும் இருந்த ஆங் சான் சூகி மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளது.
2020 தேர்தல் பிரச்சாரத்தின் போது கொவிட்-19 தொற்றுநோய் கட்டுப்பாடுகளை மீறுதல், தூண்டுதல், சட்ட விரோதமாக வாக்கி டாக்கிகளை இறக்குமதி செய்தல் மற்றும் வைத்திருப்பது மற்றும் காலனித்துவ கால அதிகாரப்பூர்வ ரகசியச் சட்டத்தை உடைத்தல் போன்ற பல ஊழல் குற்றச்சாட்டுகள் அவற்றில் அடங்கும்.
கடந்த ஆண்டு நவம்பரில் நடந்த பொதுத்தேர்தலில் மோசடி நடந்திருப்பதாகக் குற்றம்சாட்டி, கடந்த பெப்ரவரி முதலாம் திகதி மியன்மார் இராணுவம் ஜனநாயக ஆட்சியை கவிழ்த்தது.
இதன்பின்னர், நாட்டின் தலைவர் 75வயதான ஆங் சான் சூகி, ஜனாதிபதி வின் மைண்ட் உட்பட ஆளும் கட்சியை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட தலைவர்களை கைது செய்து வீட்டுக் காவலில் வைத்த இராணுவம், நாடு முழுவதும் ஓராண்டுக்கு அவசரநிலையை பிரகடனப்படுத்தியது.
ஆனால், இராணுவத்தின் இந்நடவடிக்கைக்கு எதிராக மக்கள் தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். ஆனால், போராட்டத்தைக் கடுமையான நடவடிக்கைகள் மூலமாக இராணுவம் ஒடுக்கி வருகிறது.
தற்போதுவரை மியன்மாரில் இராணுவத்துக்கு எதிரான போராட்டத்தில் 1500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அரசியல் கைதிகளுக்கான உதவி சங்கம் கூறியுள்ளது.