சீனாவின் பெய்ஜிங் நகரில் நடைபெற்று வரும் குளிர்கால ஒலிம்பிக் போட்டித் தொடரின் பதக்க பட்டியலில், நேர்வே முதலிடம் பிடித்துள்ளது.
இரண்டு தங்க பதக்கங்கள், ஒரு வெண்கல பதக்கம் என மூன்று பதக்கங்களுடன் நேர்வே முதலிடம் பிடித்துள்ளது.
இதனைத்தொடர்ந்து இரண்டு தங்க பதக்கங்களுடன் சுவீடன் இரண்டாவது இடத்திலும், ரஷ்யா ஒரு தங்க பதக்கம் தலா இரண்டு வெள்ளி மற்றும் வெண்கல பதங்கங்கள் என மொத்தம் ஐந்து பதக்கங்களுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளன.
இதனிடையே குளிர்கால ஒலிம்பிக் போட்டித் தொடரில் பங்கேற்க வந்தவர்களில் 10 பேருக்கு, கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
குளிர்கால ஒலிம்பிக்கின் ஒருங்கிணைப்புக் குழு ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட தகவலில், ‘மொத்தம் 72,000 கொரோனா நோய்த் தொற்று பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன என்றும், கடந்த 24 மணி நேரத்தில், 4 போட்டியாளர்கள் உட்பட 10 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் தொற்று கண்டறியப்பட்ட போட்டியாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 4ஆம் திகதி ஆரம்பமான குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள், எதிர்வரும் பெப்ரவரி மாதம் 20ஆம் திகதி வரை நடைபெறுகின்றன.
1,581 ஆண்கள் மற்றும் 1,290 பெண்கள் அடங்களாக, மொத்தமாக 2,871 வீர, வீராங்கனைகள் இந்த ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கின்றனர். மொத்தமாக 91 நாடுகள் பங்கேற்கின்றன.