நாட்டின் உற்பத்தி வீழ்ச்சி மற்றும் அரசியல்வாதிகளின் ஊழல் நடவடிக்கைகளால் பொதுமக்கள் தற்போது சிரமங்களை அனுபவித்து வருவதாக தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.
காலியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அக்கட்சியின் நாடா ளுமன்ற உறுப்பினர் விஜித் ஹேரத், இதனை தெரிவித்தார்.
நிதி நெருக்கடிக்கு மத்தியில் அமைச்சர்கள் தியாகங்களைச் செய்து முன்மாதிரியாக இருக்க வேண்டும் என அரசாங்கம் கூறுகின்றது.
இருப்பினும் தற்போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது தனிப்பட்ட தேவைகளுக்காக அரச நிதியை பயன்படுத்துகின்றனர் என குற்றம் சாட்டினார்.
ஒவ்வொரு அமைச்சருக்கும் மாதாந்த எரிபொருள் கொடுப்பனவில் இருந்து ஐந்து லீற்றரை குறைக்க நிதியமைச்சர் முன்மொழிந்ததாக விஜித் ஹேரத் குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும் ஒரு அமைச்சருக்கு மாதாந்தம் 270,000 கொடுப்பனவுகள் கிடைக்கும் நிலையில் எரிபொருளுடன் சேர்த்து இவற்றையும் குறைக்க முடியும் என விஜித் ஹேரத் தெரிவித்தார்.
அரசாங்கம் உண்மையில் மாற்றத்தையும் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதிலும் ஆர்வமாக கொண்டிருந்தால் இவ்வாறான விடயங்களை செய்ய வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.