ஊடக நிறுவனங்கள் மற்றும் ஏனைய பெரிய வர்த்தக நிறுவனங்கள் உட்பட மொத்த மின்சார பாவனையாளர்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) முன்மொழிந்துள்ளது.
இந்த விடயம் குறித்து ஊடகங்களுக்கு தெரிவித்துள்ள அந்த ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க, அதிகளவில் மின்சாரம் பயன்படுத்தும் பெரிய நிறுவனங்கள் தங்களுக்கென ஜெனரேட்டர்களை வைத்துள்ளன என்றும் அத்தகைய நிறுவனங்களை தங்கள் சொந்த ஜெனரேட்டர்களை சார்ந்து இருக்குமாறு கேட்கலாம் என்றும் அவர் கூறினார்.
மொத்த பாவனையாளர்களுக்கு மின்வெட்டுகளை அமுல்படுத்துவதன் மூலம் திட்டமிடப்பட்ட மின்வெட்டுகள் நாடு முழுவதும் அமுல்படுத்தப்படாமல் இருப்பதை உறுதிசெய்யும் என அவர் தெரிவித்தார்.
இலங்கை மின்சார சபையின் (CEB) சில அதிகாரிகள் இந்த முன்மொழிவு நடைமுறைக்கு சாத்தியமில்லை என்று கருதுவதாக தெரிவித்த அவர், எவ்வாறாயினும், இந்த பிரேரணை நடைமுறைக்குரியது என தாங்கள் கருதுவதாகவும், அதனை முயற்சிக்க வேண்டும் எனவும் கூறினார்.
பாரியளவிலான மின்சார பாவனையாளர்கள் தமது ஜெனரேட்டர்களை இயக்குவதற்கு எரிபொருளை கொள்வனவு செய்ய முடியும் எனவும், ஆனால் செயற்பாட்டாளர் மின் நிலையங்களுக்கு போதுமான எரிபொருளை கொள்வனவு செய்வதற்கு மின்சார சபையிடம் நிதி இல்லை எனவும் அவர் கூறினார்.
எந்தவொரு மின் நிலையத்திலும் பாரிய செயலிழப்பு இல்லாமை, எரிபொருள் தட்டுப்பாடு இல்லாமை மற்றும் நீர் மின் நிலையங்களில் போதியளவு தண்ணீர் உள்ளமை போன்றவற்றினால் ஏப்ரல் மாதம் வரை திட்டமிடப்பட்ட மின்வெட்டு தேவைப்படாது என ஆணைக்குழு கருதுவதாகவும் ரத்நாயக்க கூறினார்.
இதேநேரம், தடையில்லா மின்சாரத்தை உறுதி செய்வதற்கான முக்கிய காரணிகள் சீராக இயங்கும் என்ற அனுமானத்தில் ஏப்ரல் வரை திட்டமிடப்பட்ட மின்வெட்டு இருக்காது என்று எப்படி முன்னரே தீர்மானிக்கப்பட்டது என்று சிலர் கேள்வி எழுப்பியதாக அவர் கூறினார். சர் ஐசக் நியூட்டன் போன்ற நன்கு அறியப்பட்ட விஞ்ஞானிகள்கூட அனுமானங்களின் அடிப்படையில் தங்கள் தீர்மானங்களை அடைந்துள்ளனர் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.