தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் டொனால்ட் லூ இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.
பங்களாதேஷ் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கு எதிர்வரும் மார்ச் மாதம் விஜயம் செய்யவுள்ளமையினை நேற்று (வியாழக்கிழமை) காணொளி மூலம் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போது டொனால்ட் லூ உறுதிப்படுத்தியுள்ளார்.
இலங்கைக்கான தனது விஜயத்தின் போது கவனம் செலுத்தவுள்ள விடயங்கள் குறித்த தகவல்கள் எதனையும் அவர் இதன்போது வெளியிடவில்லை.
எனினும், மனித உரிமைகள் மற்றும் இருதரப்பு வர்த்தகம் தொடர்பில் குறித்த விஜயத்தின் போது முக்கியத்துவம் வழங்கப்படும் என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், இலங்கைக்கான விஜயத்தின் போது டொனால்ட் லூ, சுதந்திரமான மற்றும் திறந்த இந்தோ-பசிபிக் தொடர்பான அமெரிக்காவின் கொள்கையை வலியுறுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை, இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதுவராக ஜூலி சுங் கொழும்பில் கடமைகளைப் பொறுப்பேற்ற பின்னர் இலங்கைக்கு வருகை தரும் முதல் அமெரிக்க இராஜதந்திர அதிகாரி டொனால்ட் லூ என்பதுக் குறிப்பிடத்தக்கது.