மாஸ்கோவில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் இருந்த இரண்டாவது மூத்த இராஜதந்திரியை, எந்தவித நியாயமும் இல்லாமல் ரஷ்யா வெளியேற்றியதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது.
தூதரகத்தில் உள்ள தூதருக்கு அடுத்தபடியாக மாஸ்கோவில் உள்ள அமெரிக்க துணைத் தூதுவர் பார்ட் கோர்மன், இந்த ஆண்டின் தொடக்கத்தில் ரஷ்யாவால் வெளியேற்றப்பட்டார் மற்றும் நாட்டை விட்டு வெளியேற இரண்டு வாரங்கள் அவகாசம் அளித்ததாக அமெரிக்க வெளியுறவுத்துறை மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மேலும், கோர்மன் கடந்த வாரம் ரஷ்யாவை விட்டு வெளியேறி அமெரிக்கா திரும்பியுள்ளார் என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.
உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு பற்றிய வளர்ந்து வரும் கவலைகள் மற்றும் அடுத்த சில நாட்களில் ரஷ்யா உக்ரைனைத் தாக்க திட்டமிட்டுள்ளது என்பதற்கான எல்லா அறிகுறிகளும் அமெரிக்காவிடம் உள்ளது என்று வியாழனன்று ஜனாதிபதி ஜோ பைடனின் எச்சரிக்கைக்கு மத்தியில் இந்த இராஜதந்திர பிரச்சினை வந்துள்ளது.
அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் வியாழக்கிழமைகோர்மனை ரஷ்யா வெளியேற்றியதை உறுதிப்படுத்தினார்.
வெளியேற்றப்பட்ட பார்ட் கோர்மன், அமெரிக்க தூதரகத்தில் இரண்டாம் இடத்தில் இருப்பவர். 3 ஆண்டுகளாக அவர் அங்கு பணியாற்றி உள்ளதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் கூறினார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘இது ஒரு தீவிர நடவடிக்கையாக நாங்கள் கருதுகிறோம், மேலும் எங்கள் பதிலை பரிசீலித்து வருகிறோம்’ என கூறினார்.
கோர்மன் செல்லுபடியாகும் விசாவுடன் ரஷ்யாவில் மூன்று வருடங்களுக்கும் குறைவாகவே இருந்தார் மற்றும் அவரது சுற்றுப்பயணம் முடிவடையவில்லை. மேலும் கோர்மன் தூதரகத்தின் மூத்த தலைமைக் குழுவில் முக்கிய உறுப்பினர் என்றும் குறிப்பிட்டார்.
‘அமெரிக்க தூதர்கள் மற்றும் ஊழியர்களை அடிப்படையற்ற வெளியேற்றத்தை முடிவுக்கு கொண்டு வரவும், எங்கள் பணிகளை மீண்டும் கட்டியெழுப்ப ஆக்கப்பூர்வமாக செயற்படவும் ரஷ்யாவை நாங்கள் அழைக்கிறோம்,’ என்று செய்தித் தொடர்பாளர் மேலும் கூறினார்.