சமீபத்திய வாரங்களில் ஒட்டாவாவில் வெடித்த எதிர்ப்புகள் மற்றும் முற்றுகைகள் மற்றும் எல்லைக் கடப்புகள் முடக்கப்பட்டதற்கு பதிலளிக்கும் வகையில் பயன்படுத்தப்பட்ட, சக்திவாய்ந்த அவசரகாலச் சட்டத்தை மீளப்பெறுவதாக கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார்.
நிலைமை இனி அவசரமாக இல்லை என்னும், தற்போதுள்ள சட்டங்கள் மக்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க போதுமானவை என்று தாங்கள் நம்புவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
ஆளுனர் ஜெனரல் புதன்கிழமை பிற்பகல் அவசரகாலச் சட்டத்தை திரும்பப் பெறுவதில் கையெழுத்திட்டார். இது முறையாக அவசரகால நிலையை முடிவுக்குக் கொண்டு வந்தது.
கடந்த திங்கட்கிழமை சட்டத்தை பயன்படுத்துவதை உறுதிசெய்ய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபையில் வாக்களித்தனர்.
செனட் நேற்று (புதன்கிழமை) இந்தச் சட்டத்தை விவாதிப்பதற்கு தயாராக இருந்த நிலையில், ட்ரூடோ தனது அறிவிப்பை மீளப்பெற்றார்.
கடந்த பெப்ரவரி 14ஆம் திகதி சட்டத்தை செயற்படுத்துவதற்கான அரசாங்கத்தின் முடிவு சர்ச்சைக்கும் விமர்சனத்திற்கும் உள்ளானது. கடந்த 1988ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதிலிருந்து இந்தச் சட்டம் பயன்படுத்தப்படவில்லை.
சட்டத்தின் அறிமுகமானது, எதிர்ப்பாளர்களின் வங்கிக் கணக்குகள் மற்றும் கடன் அட்டைகளை முடக்கும் திறன் உள்ளிட்ட தற்காலிக அதிகாரங்களை அதிகாரிகளுக்கு வழங்கியது. ஒட்டாவா கான்வாய் எதிர்ப்பு போன்ற சட்டவிரோதமான கூட்டம் என்று கருதப்படும் எந்த நிகழ்விலும் கலந்துகொள்வதும் சட்டவிரோதமானது என அறிவிக்கப்பட்டது.