நாட்டில் நெருக்கடி ஏற்பட்டுள்ளதை ஒப்புக்கொள்கிறோம் என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (வியாழக்கிழமை) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்குப் பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
ஒரு வருடத்திற்கும் மேலாக அந்நிய செலாவணி நெருக்கடி குறித்து அரசாங்கமே எச்சரித்ததாகவும் அது அரசாங்கத்தின் பிரச்சினை மட்டுமன்றி நாட்டின் பிரச்சினையாக மாறியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அரசாங்கம் தவறு செய்தால், தொடர்ந்து தாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று கூறுமாறு கோரிய அமைச்சர், தங்களின் தவறுகளை ஏற்றுக்கொண்டு அவற்றைத் திருத்த முயற்சிப்போம் என்றும் அதனால் பாதிக்கப்படுவது அரசாங்கம் மட்டுமல்ல முழு நாடும்தான் என்றும் குறிப்பிட்டார்.
இதேவேளை, இலங்கைக்கு அதிகளவு கையிருப்பு கிடைக்கவுள்ளதாக தெரிவித்த எரிசக்தி அமைச்சர், இதுவரை கிடைத்துள்ள எரிபொருள் கையிருப்பில் 6,000 மெட்ரிக் தொன் இலங்கை மின்சார சபைக்கும் 4,200 மெட்ரிக் தொன் சோஜிட்ஸ் மின் உற்பத்தி நிலையத்திற்கும் வழங்கப்படவுள்ளதாகவும் கூறினார்.
மேலும் உலை எண்ணெயை கொள்வனவு செய்வதற்கு வழங்கப்பட்டுள்ள ஒப்பந்தத்தின் பிரகாரம் எதிர்வரும் மார்ச் மாதம் 3ஆம் திகதி இலங்கைக்கு 30,000 மெற்றிக் தொன் உலை எண்ணெய் கிடைக்குமெனவும் சரியான திகதியில் கடனுதவி கிடைத்தால், அனல் மின் நிலையங்களுக்கு தொடர்ச்சியான எரிபொருள் விநியோகம் குறித்து அரசாங்கத்தினால் உறுதிப்படுத்த முடியும் எனவும் தெரிவித்தார்.
மேலும் இந்திய கடன் வரித் திட்டத்தின் கீழ் 500 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு எரிபொருளை இறக்குமதி செய்ய எதிர்பார்த்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் நாளாந்தம் 900 மெற்றிக் தொன் உலை எண்ணெயை உற்பத்தி செய்கிறது என்றும் எனினும் அடுத்த மூன்று மாதங்களில் நாட்டிற்கு 1.2 பில்லியன் அமெரிக்க டொலர்கள் எரிபொருளை இறக்குமதி செய்யத் தேவைப்படும் என்றும் இது ஆறு மாதங்களுக்கு போதுமானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.