ரஷ்யாவுடன் உடனடியாக போர் நிறுத்தம் மற்றும் அமைதிப் பேச்சுக்களை நடத்த தயாராக இருப்பதாக, உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் செய்தித் தொடர்பாளர், செர்ஹி நிக்கிஃபோரோவ் அறிவித்துள்ளார்.
முகப்புத்தகத்தில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘நாங்கள் பேச்சுவார்த்தை நடத்த மறுத்துவிட்டோம் என்ற அறிக்கைகளை நான் மறுக்க வேண்டும். உக்ரைன் சண்டையின் முடிவு மற்றும் அமைதி பற்றி பேச தயாராக உள்ளது. இதுதான் எங்களின் மாறாத நிலை.
ரஷ்ய ஜனாதிபதியின் சலுகைக்கு நாங்கள் ஒப்புக்கொண்டோம். இந்த நேரத்தில், பேச்சுவார்த்தை நடத்துவதற்கான இடம் மற்றும் நேரம் குறித்து இருதரப்பும் ஆலோசனை நடத்தி வருகின்றன.
பேச்சுவார்த்தைகள் எவ்வளவு விரைவில் தொடங்குகிறதோ, அவ்வளவுக்கு அதிகமான வாய்ப்புகள் இயல்பு வாழ்க்கையை மீட்டெடுக்கும்’ என கூறினார்.
முன்னதாக வெள்ளிக்கிழமை, உக்ரைன் ஜனாதிபதியின் ஆலோசகர் மைக்கைலோ பொடோலியாக், நாடு அமைதியை விரும்புவதாகவும், நேட்டோ தொடர்பான நடுநிலை நிலை உட்பட ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாகவும் கூறினார்.