மின் உற்பத்தி நிலையங்களுக்கு அதிகளவு எரிபொருள் வழங்கப்படுவதால் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விநியோகிக்கப்படும் எரிபொருளின் அளவு குறைவடைந்துள்ளது.
இலங்கை எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கம் இதுகுறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது.
நாடளாவிய ரீதியில் பல நிரப்பு நிலையங்களில் பாரிய கொள்கலன்களுக்கான எரிபொருள் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறித்த சங்கம் தெரிவித்துள்ளது.
நிலவும் சூழ்நிலை காரணமாக நேற்றைய தினம் நாட்டின் பல பகுதிகளில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் வாகனங்கள் நீண்ட வரிசையில் காணப்பட்டதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்று முதல் லங்கா ஐஓசி எரிபொருள் விலைகள் மேலும் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், சிபெட்கோ எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு வருகை தரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இதேவேளை, எரிபொருள் நெருக்கடியால் புகையிரத சேவைக்கு இதுவரை எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.